ETV Bharat / state

தடையை மீறி பட்டாசு வெடிப்பு: காவல்துறையினர் வழக்குப்பதிவு

author img

By

Published : Nov 14, 2020, 10:54 PM IST

சென்னை: தீபாவளி நாளான இன்று (நவம்பர் 14) சென்னையில் 33 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 79 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

violation of firework ban: Police filed the case
violation of firework ban: Police filed the case

சென்னையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஜவுளி கடைகள் இருக்கும் இடங்களான தி.நகர், வண்ணாரப்பேட்டை போன்ற இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

தமிழ்நாட்டில் தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்திருந்தார்.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு சென்னையில் பலர் காலை முதலே பட்டாசு வெடித்து வந்தனர். இதனால் நீதிமன்றம் விதித்திருந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாலை 5 மணி வரை சுமார் 79 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்தனர்.

உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததால் பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. குறிப்பாக பெரம்பூர் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் ராக்கெட்டின் தீப்பொறி பட்டு அடுத்தடுத்து மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் பல்லாயிரம் மதிப்பிலான பொருள்கள் நாசமாகின. இதேபோல இரவு 8 மணி வரையில் 33 இடங்களில் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் மட்டுமே 25 விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.