ETV Bharat / state

விடைபெற்றார் விஜயகாந்த்.. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 7:12 PM IST

Updated : Dec 29, 2023, 8:00 PM IST

Vijayakanth funeral at DMDK office: மறைந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் குடும்பத்தினர், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம்
விஜயகாந்த் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம்

விஜயகாந்த் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம்

சென்னை: பிரபல திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று (டிச.29) மாலை நடைபெற்றது.

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு ஆயிரக்கணக்கான பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தக் குவிந்த நிலையில், பொது அஞ்சலிக்காக இன்று காலை 6 மணி அளவில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்திலிருந்து சென்னை தீவுத்திடலுக்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கு அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள், பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, இறுதிச் சடங்கிற்காக கனத்த இதயங்களுடன் பொதுமக்களின் கண்ணீர் மழையில் மீண்டும் தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் உடல் மக்களின் அலைமோதும் கூட்டத்தில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்தின் உடல் குடும்பத்தினர், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரது முன்னிலையில், 3 முறை 24 குண்டுகள் என 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து, குடும்பத்தினர் சார்பாக இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்தனப்பேழையில் "புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நிறுவனத்தலைவர்: தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என எழுதப்பட்டு, கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் அவரது உடலுக்காக காத்திருந்தது காண்போரைக் கண்கலங்கச் செய்தது.

இதையும் படிங்க: மறைந்த விஜயகாந்த் உடலிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி!

Last Updated :Dec 29, 2023, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.