ETV Bharat / state

'ஸ்டெர்லைட் ஆலை இயங்க வழிசெய்த மாநில அரசு' வைகோ குற்றச்சாட்டு!

author img

By

Published : Apr 27, 2021, 3:07 PM IST

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே தவறி விட்டது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை குறுக்கு வழியில் திறக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்துவிட்டதாகவும், வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்க வழிசெய்த மாநில அரசு- வைகோ குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலை இயங்க வழிசெய்த மாநில அரசு- வைகோ குற்றச்சாட்டு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜனை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, 1996 இல் இருந்து போராடி வருகின்றேன். தொடர்ந்து உண்ணாவிரதங்கள், நடைபயணங்கள், மறியல், முற்றுகை என மதிமுக போராட்டங்கள் நடத்திய அளவிற்கு, தமிழ்நாட்டில் வேறு யாரும் நடத்தியது கிடையாது.

பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997ஆம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தேன். அதில், நானே வாதாடினேன். 2010 செப்டம்பர் 28ஆம் தேதியன்று, ஆலையை மூடுமாறு தீர்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தடை ஆணை பெற்றது. 2013 ஏப்ரல் 2ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதன்பிறகு, நான் தீர்ப்பாயத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தேன். மீண்டும இன்னொரு ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.

அந்த ரிட் மனு, இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. இதற்கு இடையில் நடைபெற்ற போராட்டத்தில்தான் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு, முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவே வேலை செய்து வந்துள்ளது.

தற்போது, நாட்டில் ஆக்ஸிஜன் தேவை என்ற பெயரில், ஸ்டெர்லைட்டை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கின்றது. தமிழ்நாட்டுக்குத் தேவையான ஆக்ஸிஜனை மட்டும்தான் ஆக்க வேண்டும்; அதைப் பகிர்ந்து வழங்குகின்ற அதிகாரமும் தமிழ்நாட்டுக்குத்தான் வேண்டும் என நேற்று(ஏப்.26) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று(ஏப்.27) உச்ச நீதிமன்றத்தில், ஆக்ஸிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே தவறி விட்டது. மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பொறுப்பில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.