ETV Bharat / state

சுங்கத்துறை தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட உ.பி இளைஞர் கைது - வடமாநிலத்தைச் சேர்ந்த 28 பேருக்கு பிணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 9:35 AM IST

Updated : Oct 15, 2023, 10:33 AM IST

Customs Examination: சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் கருவிகள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்ட 28 நபர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணையில் விடுவித்தனர். மேலும், தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததில் உத்தரப்பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Customs Examination
சுங்கத்துறை தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச இளைஞர் கைது

சென்னை: சுங்கத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் மற்றும் கேண்டின் உள்ளிட்ட பல்வேறு 17 பணியிடங்களுக்குத் தேர்வுகள் நேற்று (அக்.14) நடத்தப்பட்டன. இதில் இறுதியாக 1,600 பேர் எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேர்வில் சிலர் ப்ளூடூத் உள்ளிட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி முறைகேடில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், ஹரியானாவைச் சேர்ந்த 26 நபர்களையும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் என மொத்தம் 28 நபர்கள் ப்ளூடூத்தைப் பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த 28 நபர்களையும் சுங்கத்துறை அலுவலர்கள் பிடித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஷேர் சிங் என்பவருக்குப் பதிலாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷர்வன் குமார் என்பவர் தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரையும் பிடித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின், அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணைக்குப் பிறகு, சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதிய 28 நபர்கள் மீதும் நம்பிக்கை மோசடி மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிவிட்டு, 28 நபர்களையும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய உத்தரப்பிரதேச இளைஞர் ஷர்வன் குமாரை மட்டும் போலீசார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:திரைப்பட சிறப்புக் காட்சிகளுக்கு விதிமுறைகளை வகுக்க வலியுறுத்தி மனுத்தாக்கல்!

Last Updated : Oct 15, 2023, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.