ETV Bharat / state

வாச்சாத்தி வழக்கு; 32 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள் சங்கத்தினர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 3:11 PM IST

Vachathi case: வாச்சாத்தி மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை, மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

vachathi case
'வாச்சாத்தி' வழக்கில் 32 வருட போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றி

வாச்சாத்தி மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை, மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

சென்னை: வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்களைப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தி, கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாகத் தாக்கி பொருட்களை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் உள்பட 124 வனத்துறையினர், 86 காவல் துறையினர், 5 வருவாய்த் துறையினர் என 215 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

தற்போது இவ்வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டதால், மீதமுள்ளவர்களுக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். மேலும், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களையும், அப்பகுதியையும் நேரில் சென்று ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த மார்ச் 4ஆம் தேதி சம்பவம் நடந்த வாச்சாத்தி மலைக்கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். வாச்சாத்தி மலைக்கிராமத்தில் இருந்து கலசப்பாடி, அரசநந்தம் உள்ளிட்ட மலைக்கிராம மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் நேரடியாக விசாரணை செய்தார். அந்த விசாரணையின் அடிப்படையில், கிட்டத்தட்ட 32 வருடங்களுக்குப் பிறகு நேற்று (செப்.29) தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க அலுவலக வாயிலில், வாச்சாத்தி வழக்கில் மேல் முறையீட்டை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை வரவேற்கும் விதமாக பறை இசை அடித்து, ‘வாச்சாத்தி வழக்கை வரவேற்கிறோம், வரவேற்கிறோம்’ என கோஷமிட்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இது 32 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி எனவும் ஆரவாரம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மலைவாழ் மக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சண்முகம், "வாச்சாத்தி வழக்கில் நீதியரசர் வேல்முருகன் சிறப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறார். கடந்த 1992ஆம் ஆண்டு, ஜூன் 20, 21, 22ஆம் தேதி வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் 300 பேரால் வாச்சாத்தி கிராமத்தில் உள்ளவர்களின் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

18 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தார்கள். எல்லா நீதிமன்றமும் சென்று, தற்போது இறுதியான தீர்ப்பு வந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. மேல் முறையீடு முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அப்போது தண்டனை பெறாத மாவட்ட ஆட்சித்தலைவர் தசரதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமானுஜம், மாவட்ட வனத்துறை நாதன் ஆகிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, கிராம முன்னேற்றத்திற்கு திட்டம் என உத்தரவிட்டிருக்கிறது, நீதிமன்றம். அரசு அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டால்தான், தமிழ்நாட்டு மக்கள் ஒரு நம்பிக்கையை பெற முடியும். எவ்வளவு உயர் பொறுப்பில் இருந்தாலும் நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாச்சாத்தி வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.