ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சியில் உரிய மதிப்பெண் இருந்தும் நிராகரித்தது ஏன்? - நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி கருத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 10:25 PM IST

TNPSC malpractice issue: டிஎன்பிஎஸ்சி தேர்வில் உரிய மதிப்பெண் எடுத்தும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், நிகழந்த தவறை எப்படி சரி செய்வது? என்பது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தேர்வு தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் இன்று (செப்.30) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை வழங்கியதற்காக தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தேர்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மனுதாரரை தேர்வு செய்வது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனவும், தவறு எப்படி நடந்தது, எப்படி சரி செய்வது என்பது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் எனவும், மொத்த தேர்வு முறை குறித்து விசாரித்தால் அது தேர்வாணையத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் விளக்கமளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை 1,000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.