ETV Bharat / state

ஈஷாவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Dec 14, 2022, 10:25 PM IST

வனப்பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டி கல்வி நிறுவனமாக செயல்படுவதால் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஷாவிற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது..! - சென்னை உயர் நீதிமன்றம்
ஈஷாவிற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது..! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுக்குத் தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஏற்கெனவே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, ஈஷா அறக்கட்டளை கல்வி நிறுவனமா? இல்லையா? என்பதே தற்போது வரை சர்ச்சைக்குரிய கேள்வியாகவே உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஈஷா அமைப்பில் 10 ஆயிரம் சதுர மீட்டர் மட்டுமே கல்வி நிறுவனமாக கருதலாம் என்றும், மற்ற பரப்பளவை கல்வி நிறுவனமாக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் விலக்கு அளிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல் படுத்த முடியாது என்பதால் இடைக்கால தடையை நீக்க வேண்டும். நோட்டீஸ் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வாதம் முன் வைக்கப்பட்டது.

ஈஷா அறக்கட்டளை தரப்பில், உடல், மனம் மற்றும் நன்னெறி மேம்படுத்தம் நிறுவனங்களை கல்வி நிறுவனங்களாகத் தான் கருத வேண்டும் என்பதால் கல்வி நிறுவனமாக ஈஷா அமைப்பும் உள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என வாதிடப்பட்டது.

ஒன்றிய அரசு தரப்பில், ஈஷா அறக்கட்டளை கல்வி போதிக்கும் நிறுவனம் என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் 1,25,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்திற்குள் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி விலக்கு பெற உரிமை உள்ளதாகத் தெரிவித்து ஈஷா அறக்கட்டளைக்குத் தமிழ்நாடு அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், ஈஷா யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: 'ஜெயக்குமார் ஒரு கோமாளி' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.