ETV Bharat / state

இலவச நீட் பயிற்சி பெற 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு!

author img

By

Published : Nov 2, 2020, 7:04 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறை வழங்கும் இலவச நீட் பயிற்சிகளைப் பெறுவதற்காக 15 ஆயிரம் மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

இலவச நீட் பயிற்சி பெற 15ஆயிரம் மாணவர்கள் பதிவு!
இலவச நீட் பயிற்சி பெற 15ஆயிரம் மாணவர்கள் பதிவு!

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்வுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை தயாராகிவருகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து இதுவரை 14 ஆயிரத்து 975 மாணவர்கள் பதிவுசெய்துள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்து 380 மாணவர்களும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 70 மாணவர்களும் பதிவுசெய்துள்ளனர். கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 680 மாணவர்கள் பதிவுசெய்த நிலையில், இறுதியாக ஆறாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் ஆயிரத்து 615 பேர் தேர்ச்சிப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலுக்கு வருவதால் நடப்பாண்டில் 300 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆண்டில் 13 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் பணிகள் முடிக்கப்பட்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அனுமதி பெறப்பட்டு மேலும் கூடுதலாக 1500 இடங்கள் மருத்துவப் படிப்பில் கிடைக்கும். இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாகும்.

குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பினைப் பெற முடியும் என்பதால், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத விரும்புகின்றனர். அதனடிப்படையில் நடப்பாண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வரும் ஆண்டில் நீட் தேர்வு எழுதுவதற்கு அரசால் அளிக்கப்படும் இலவச பயிற்சியில் சேரலாம் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் நடப்பாண்டில் படிக்கும் மாணவர்களும், ஏற்கனவே நீட் தேர்வினை எழுதி குறைந்த மதிப்பெண் பெற்று மருத்துவராக விருப்பமுள்ள மாணவர்கள் மீண்டும் விண்ணப்பித்துவருகின்றனர்.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் வரும் 16ஆம் தேதிமுதல் திறந்து செயல்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் பள்ளி மாணவர்களுக்கு 11, 12ஆம் வகுப்பில் ஆசிரியர்களைக் கொண்டு நேரடியாகப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இ-பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் தேதி உறுதியான பின்னர் பயிற்சி அளிக்கப்படும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அளிக்கும் பயிற்சியுடன் நேரடியாகவும் பயிற்சி அளித்தால் எளிதில் புரிந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் எனப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கருதுகின்றனர்.

வரும் கல்வியாண்டில் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க...ஜூன் மாதத்திற்குள் கரோனா தடுப்பு மருந்து வெளியாகும் - பாரத் பயோடெக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.