ETV Bharat / state

சென்னையில் சித்த மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி; 2 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : May 12, 2023, 9:11 AM IST

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், தந்தை மற்றும் மகள் உயிரிழந்தனர். தாயார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சாலிகிராமம் திலகர் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன்(60). சித்த மருத்துவரான இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்தார். இவருக்கு சாருமதி (57) என்ற மனைவியும், ஜனப்பிரியா(24) என்ற மகளும் இருந்தனர். சாருமதி நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகவும், ஜனப்பிரியா 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாகச் சித்த மருத்துவ தொழில் நஷ்டத்தில் செல்வதால் கங்காதரன் மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இன்று நள்ளிரவும் பிரச்சனை ஏற்படவே, கங்காதரன், மனைவி, மகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இளம்பெண் ஜனப்பிரியா, இவ்விவகாரம் தொடர்பாக ஹேமலதா என்பவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, மூவரும் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளனர். மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கங்காதரன் மற்றும் ஜனப்பிரியா ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சாருமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இறந்த ஜனப்பிரியாவின் செல்போனை கைப்பற்றி சைபர் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி உள்ளனர். ஒரே குடும்பத்தில் மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் கடன் பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தடுப்பு உதவி எண்

தற்கொலை என்பது எந்த பிரச்னைக்கும் தீர்வல்ல. உங்களுக்கு தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் தோன்றினாலோ அல்லது மன உளைச்சலில் இருந்தாலோ 1098 என்ற தற்கொலை தடுப்பு உதவி மைய எண் மற்றும் 9152987821 என்ற உதவி எண்னை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்.

இதையும் படிங்க: இது எங்க ஏரியா..! தாதா பிரச்னையில் தகராறு.. சென்னையில் 4 புள்ளிங்கோ கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.