ETV Bharat / state

அரசு அலுவலர் உள்பட மூவர் கைது!

author img

By

Published : Jun 11, 2021, 12:27 AM IST

மூவர் கைது
மூவர் கைது

தனியார் நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் உள்பட மூவரை சிபிஐ அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர்.

சென்னை: மதுரை, சென்னையைச் சேர்ந்த இரு தனியார் நிறுவன உரிமையாளர், ஒப்பந்ததார்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் தேவையான பணிகளை செய்துவருவதாக மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் பாஸ்கர் என்பவர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதனை சிபிஐ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுரை மண்டல மத்திய பொதுப்பணித் துறை நிர்வாகப் பொறியாளர் பாஸ்கர், மதுரையைச் சேர்ந்த பிரம்மா டெவெலப்பர்ஸ் (Brahma Developers), சென்னையைச் சேர்ந்த எஸ்.கே எலக்ட்ரிகல்ஸ் (SK Electricals) ஆகிய இரு நிறுவனங்களிடம் இருந்து 1.5 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அவர்களின் தேவைக்கேற்ப அலுவல் பணிகளை விரைந்து முடிக்க உதவியதோடு, அவர்கள் தரப்பில் செலுத்தப்பட்ட சேவை வரிகளை திரும்பப்பெற தேவையான வழிவகைகளை செய்து கொடுத்தது தகுந்த ஆதாரங்களுடன் உறுதியானது.

இதனையடுத்து பாஸ்கர், பிரம்மா டெவெலப்பர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் ராஜா, எஸ்.கே எலக்ட்ரிகல்ஸ் ஒப்பந்ததாரரான நாராயணன் ஆகிய மூவரையும் சிபிஐ அலுவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும், கைதுசெய்யப்பட்ட பாஸ்கரிடம் இருந்து அவர் லஞ்சமாகப் பெற்ற பணம் ரூ. 70 ஆயிரத்தை பறிமுதல்செய்தனர்.

மேலும், அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாஸ்கர் பல்வேறு ஒப்பந்ததாரர்கள், நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற பணம் சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயையும் சிபிஐ அலுவலர்கள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட மூவரும் மதுரை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: 'உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.