ETV Bharat / state

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் திருமாவளவன் புகார்

author img

By

Published : Feb 27, 2023, 4:19 PM IST

'ராணுவ வீரர் குண்டுவீசுவோம், துப்பாக்கியால் சுடுவோம்' என பேசியதை பாஜக தலைவர் அண்ணாமலை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறார். அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கி ஆதாயம் தேட பாஜக நினைக்கிறது. நாடெங்கும் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்துள்ளார்.

Thirumavalavan complains to the DGP to take action against the BJP
பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் திருமாவளவன் புகார்

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் திருமாவளவன் புகார்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், 'காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக தொடர்ந்து பாஜகவினர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.

அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பாஜக தலைவர் பேசியது வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. ராணுவ வீரர் குண்டுவீசுவோம், துப்பாக்கியால் சுடுவோம் என பேசியதை பாஜக தலைவர் அண்ணாமலை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறார். அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கி ஆதாயம் தேட பாஜக நினைக்கிறது.

வடமாநிலங்களில் பின்பற்றக்கூடிய அதே யுக்திகளை பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அண்மையில் தி.க. தலைவர் வீரமணியின் காரை வழிமறித்து இந்து முன்னணி அமைப்பினர் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளனர். இப்படி நாடெங்கும் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் செயலை டிஜிபியின் பார்வைக்கு கொண்டு சென்றேன்' என அவர் தெரிவித்தார்.

'ஆரணியில் காவல்துறையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக விசிக நிர்வாகிகள் 26 பேரை கைது செய்த தமிழ்நாட்டு காவல்துறை, தரம்கெட்டு பேசும் பாஜக மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவது ஏன்' என கேள்வி எழுப்பினார். இதனால் உடனடியாக பாஜகவினர் மீதும், வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலர் தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாகவும் அவர் கூறினார். பாஜகவினருக்கு ஒரு வழக்கம் இருக்கிறது, அவர்களே குண்டுவீசுவார்கள், கல்வீசி தாக்குதல் நடத்துவார்கள்; ஆனால் மற்றவர்கள் மேல் பழியை போடுவார்கள் என திருமாவளவன் கூறினார்.

தேர்தல் என்றாலே எப்படி நடக்கிறது என பொதுமக்களுக்கே தெரியும், இந்த கலாசாரத்தை தாண்டி பொதுமக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும் என்றும்; பொதுமக்கள் புலம்பெயருவதற்கு காரணம் வேலைவாய்ப்பின்மை தான், அதற்கு காரணம் பிரதமர் மோடி தான் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.