ETV Bharat / state

போதையில் போலீசாரிடம் சிக்கிய திருடர்கள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

author img

By

Published : Dec 28, 2022, 9:23 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் திருட்டு நகைகளை விற்க சென்றபோது மது போதையில் இருந்த திருடர்கள் காவல் துறையினரிடம் சிக்கினர்.

சென்னை: தியாகராய நகர் நடேசன் தெருவில் வசித்து வருபவர், கணேஷ் பாபு. நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் கடந்த 20ஆம் தேதி பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 7 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் அருகேவுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடி வந்தனர்.

ஆனால், எந்தவித துப்பும் கிடைக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் (டிச.26) இரவு எழும்பூர் ரயில் நிலையம் அருகே இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் மது போதையில் படுத்து கிடந்துள்ளனர். அவர்களை ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது மதுபோதையில் தியாகராய நகர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததை கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களை தியாகராய நகர் போலீசாரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட இருவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள், அம்பத்தூர் பகுதியை பூர்வீகமாக கொண்டு தற்போது ஆந்திராவில் வசித்து வரும் சையது அப்துல் கரீம், மற்றொருவர் குமார் பாடி பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுராக உள்ள சையது அப்துல் கரீம் என்பவர் மீது சென்னை கொரட்டூர், கொளத்தூர், ராஜமங்கலம், பட்டாபிராம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட கரீம் என்பவர் மூன்றாவது வரை படித்துள்ளதாகவும், தனது 15 வயது முதல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. வழக்குகள் அதிகமானதால் ஒரு கட்டத்தில் கரீம் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் மீது சென்னை போலீசார் நடவடிக்கை எடுத்ததையடுத்து, திருப்பதிக்குச் சென்று தலைமறைவாக இருந்த கரீம், அங்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

அங்கும் சரியான தொழில் கிடைக்காததால் தனது திருட்டுத் தொழிலை தொடங்கியுள்ளார். குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். மேலும் புழல் சிறையில் இருந்தபோது கரீமுக்கு பல நண்பர்கள் அறிமுகமாகியுள்ளனர். அதில் மண்ணடியைச் சேர்ந்த அப்துல்லா என்பவரும் அறிமுகம் ஆகியுள்ளார். அப்துல்லா மூலமாகவே கரீம் திருடும் நகைகளை விற்று வந்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக சென்னை தியாகராய நகர்ப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வரும் தனது மற்றொரு நண்பர் அசார் என்பவர் கடைக்கு வந்து அவருக்கு செல்போன் மூலமாக அப்துல்லாவை தொடர்பு கொண்டு, நகைகளை விற்று வந்ததும் போலீசில் சிக்காமல் இருப்பதற்கு, இவ்வாறு வேறு ஒருவரின் செல்போன்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவ்வாறு தனது நண்பர் அசாரை சந்திக்க கடந்த 20ஆம் தேதி சென்னை தியாகராய நகர் பகுதிக்கு வந்த கரீம் அடுக்குமாடி குடியிருப்பில் வெளிப்பக்கம் வீடு ஒன்று பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு, உடனடியாக தனது மற்றொரு நண்பர் குமார் என்பவரை அழைத்துள்ளார்.

எப்போதுமே கரீம், தனது பையில் 2 அடி நீளம் உள்ள இரும்பு ராடுடன் தொப்பி, கையுறை, டி-ஷர்ட் வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக தொப்பி அணிந்து கொண்டும், கையுறை அணிந்து கொண்டும் வழக்கமாக அணியும் டீ-ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டும் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்த கரீம் போலீசாரிடம் கைரேகை சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார்.

இதனை அடுத்து வரவழைக்கப்பட்ட தனது நண்பர் குமாரை, வீட்டின் வெளியே பிளம்பிங் வேலை செய்வது போல நிற்க வைத்துவிட்டு, வீட்டின் பூட்டை உடைத்து பத்து நிமிடத்திற்குள் வீட்டிலிருந்து ஏழு சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு கூட்டாக தப்பியுள்ளார். கையுறை அணிந்து கொண்டு தொப்பி அணிந்து கொண்டு, கொள்ளையடிக்க செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதால், அவர் காவல் துறையிடம் எளிதில் சிக்காமல் தப்பித்து வந்துள்ளார்.

இதனையடுத்து கொள்ளையடித்த நகைகளை விற்பதற்காக, தனது பழைய நண்பர் அப்துல்லாவை தொடர்பு கொண்டபோது, அவர் எழும்பூர் டாஸ்மாக் கடை அருகே வர சொன்னதாகவும்; அங்கு சென்ற சையது அப்துல் கரீம் மற்றும் குமார் ஆகிய இருவரும் அளவுக்கு அதிகமான மதுவை அருந்திவிட்டு ரயில் நிலையம் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவர்கள் தூங்கிவிட்டதாகவும் இதனை அடுத்து ரயில்வே போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட குமார் மீதும் சென்னையில் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கொள்ளையடிக்கும் நகை, பணத்தில் பெரும் பகுதியை சையது அப்துல் கரீம் எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பாக நகைகளை ஆந்திராவில் உள்ள தனது கள்ளக்காதலிடம் கொடுத்து வைப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. பிடிபட்ட இருவரிடமிருந்து ஆறரை சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மாம்பலம் போலீசார் சிறையில் அடைத்தனர். கொள்ளையடித்த பணத்தில் மது அருந்தி போதையில் உறங்கிய இரண்டு கொள்ளையர்கள், ஒரு வாரத்திற்குப் பிறகு போலீசாரிடம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் கோவாவில் குதூகலம்.. கும்பல் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.