ETV Bharat / state

சென்னை உலக சினிமா விழா.. மூன்று நாள் விழாவில் 15 படங்கள் திரையிடத் திட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 11:55 AM IST

சென்னை உலக சினிமா விழா (Chennai World Cinema Festival) வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் விழாவில் 15 படங்கள் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை உலக சினிமா விழா
சென்னை உலக சினிமா விழா

சென்னை: உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (ஆகஸ்ட் 23) சென்னையில் நடைபெற்றது. இதில் விழா ஏற்பாட்டாளர்களான உலக சினிமா பாஸ்கரன், இயக்குனர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை உலக சினிமா விழா
உலக சினிமா பாஸ்கரன்

இதுகுறித்து உலக சினிமா பாஸ்கரன் பேசும் போது, "15 படங்கள் இதில் திரையிடப்பட உள்ளது. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவை போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய ‘அடவி’ என்ற மௌன திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படுகிறது. மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது.

தமிழ் விண்டேஜ், உலக சினிமா, தமிழ் பெஸ்டிவல் திரைப்படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் என பல பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது. அதுமட்டுமின்றி கருணாநிதி நூற்றாண்டு விழாவோடு இணைந்து, சென்னை உலக சினிமாவில் அவரது திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும், விழாவில் பங்கேற்பதற்கு விண்ணப்ப கட்டணம் வாங்கப்படவில்லை என்றும் பார்வையாளர்களுக்கும் கட்டணம் கிடையாது எனவும் தெரிவித்தார். இந்த விழா நடத்த நன்கொடை வசூலிக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட இருப்பதாகவும், விருகம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரி திரையரங்கில் இந்த படங்கள் திரையிடப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் ‘வெள்ளிமலை’, ‘ராவண கோட்டம்’ போன்ற படங்களும் திரையிட தேர்வு செய்யப்பட்டு உள்ளதாவும், இதுவரை 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்ததைத் தொடர்ந்து, அதில் இருந்து 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுவதோடு, கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி திரைப்படமும் திரையிடப்பட உள்ளதாக" தெரிவித்தார்.

சென்னை உலக சினிமா விழா
செந்தில் குமரன் சண்முகம்

இது குறித்து செந்தில் குமரன் சண்முகம் பேசும்போது, "படம் இயக்க வரும் இளம் இயக்குநர்கள் தங்களது படங்களை திரையரங்குகளில் வெளியிட ஒரு வடிவத்திலும், திரைப்பட விழாக்களில் வெளியிட ஒரு வடிவத்திலும் எடுக்க இதுபோன்ற திரைப்பட விழாக்கள் துணையாக இருக்கும்” என்றார்.

மேலும், இயக்குனர் ராசி அழகப்பன் பேசும் போது, "வெளிநாடுகளில் சினிமாவுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. படைப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் திரைப்பட விழாக்கள் தான் கொண்டாடுகின்றன. இந்த 15 படங்களும் தகுதி உள்ள படங்கள். இந்த விழாவிற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்" என்று பேசினார்.

இதையும் படிங்க: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கணக்கில் வராத ரூ.37 லட்சம் பறிமுதல்.. ஹவாலா பணமா என விசாரணை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.