ETV Bharat / state

கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் - மோசடி கும்பல் கைது

author img

By

Published : Aug 5, 2022, 10:42 PM IST

Etv Bharat மோசடி கும்பல் குறித்த சிசிடிவி காட்சி
Etv Bharat மோசடி கும்பல் குறித்த சிசிடிவி காட்சி

கத்தியை காட்டி மிரட்டி 4.5 கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ பிளாட்டினத்தை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் வந்த நிலையில் கடனை திருப்பி கொடுத்துவிட்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக பொய் புகார் அளித்தது விசாரணையில் அம்பலமானது.

சென்னை: மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம் (51). இவர் கடந்த 23ஆம் தேதி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது நண்பர் சோனி (40) என்பவருடன் இணைந்து பாண்டிபஜார் கோவிந்த் தெருவில் சனோயா இண்டர்நேஷனல் டிரேடிங் என்ற பெயரில் தங்கம் மற்றும் பிளாட்டினம் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

மோசடி கும்பல் குறித்த சிசிடிவி காட்சி

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நண்பர் மூலம் கேரளாவை சேர்ந்த தங்கநகை மொத்த வியாபாரம் செய்யும் ஜூனேஷ் (39) மற்றும் ராஜேஷ் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், கடந்த 23ஆம் தேதி ஜுனேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் வியாபாரம் சம்மந்தமாக தனது அலுவலகத்திற்கு வந்ததாகவும், பின்னர் திடீரென ஜுனேஷ் , ராஜேஷ், இருவரும் சேர்ந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பின்னர் எங்களை கட்டிப்போட்டு விட்டு 4.5 கிலோ தங்கம், 3 கிலோ பிளாட்டினம், கணினி ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தங்களிடம் வெற்று பேப்பேரில் கையெழுத்து வாங்கியதுடன் தனது காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரின் பேரில் பாண்டிபஜார் காவல் துறையினர் உடனே சம்பவயிடத்திற்குச் சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஜுனேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பையில் தங்கம் மற்றும் பிளாட்டினத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், ராஜேஷ் மற்றும் ஜுனேஷ் மீது கொலை மிரட்டல், பறிப்பு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கேரளாவில் பதுங்கி இருந்த ஜூனேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோரை பிடித்து பாண்டிபஜார் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, கேரளாவில் ராஜேஷ் மற்றும் ஜுனேஷ் ஆகியோர் இணைந்து தங்கம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும், கடந்த 1 வருடமாக சென்னையை சேர்ந்த ராமசுப்பிரமணியம் மற்றும் சோனி ஆகியோரிடம் தங்கத்தை வழங்கி தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராமசுப்பிரமணியனிடம் 8கிலோ தங்ககட்டிகள் கொடுத்து விற்பனை செய்து கொடுக்குமாறு ஜுனேஷ் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் கொடுத்துள்ளனர்.

ஆனால் விற்பனை செய்த பணத்தை திருப்பி தராமல் ராமசுப்பிரமணியம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 23ஆம் தேதி ஜுனேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சென்னை அலுவலகத்திற்கு வந்து 8கிலோ தங்கத்தை திருப்பி கேட்டப்போது, 4.5 கிலோ தங்கம் மட்டுமே ராமசுப்பிரமணியத்திடம் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீதமுள்ள தங்கத்தை கேட்டப்போது தங்க கடைகளில் கொடுத்திருப்பதாக பொய் கூறி வந்துள்ளனர்.

இதனையடுத்து ராம சுப்பிரமணியம் தங்கத்திற்கு பதிலாக பணம், 3கிலோ பிளாட்டினம், கணினி மற்றும் கார் கொடுத்துள்ளனர். பணம் வழங்கியது தொடர்பாக ஆவணத்தில் கையெழுத்திட்டு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராமசுப்பிரமணியம் கட்டிப்போட்டு நகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறி புகார் அளித்தது பொய் என்பதை அறிந்த போலீசார் தலைமறைவாகி உள்ள ராமசுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதால் ஜுனேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளதாகவும், காவல் துறையினரால் போடப்பட்ட வழக்கு நீதிமன்றம் மூலமாக நாடி தீர்க்க உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரம் வெட்டிக்கடத்தல் - சிசிடிவி அடிப்படையில் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.