ETV Bharat / state

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் ; தங்கம் தென்னரசு கண்டனம்

author img

By

Published : Dec 27, 2020, 3:41 PM IST

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசியதற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

thiruvalluvar saffron in educational channel
கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சியில் திருவள்ளூவருக்கு காவி வண்ணம்; தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசியதற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அதிமுக அரசு, தங்கள் கட்சியை மட்டுமல்ல ; ஒட்டு மொத்த தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தையுமே மத்தியில் ஆளும் பிஜேபியிடம் அடகுவைக்கத் துணிந்து விட்டதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். தமிழர் பண்பாட்டு சின்னமான ஜல்லிக்கட்டு தொடங்கித் தமிழ்ப் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் மீது மத்திய பிஜேபி அரசு தொடுக்கும் எல்லாவிதத் தாக்குதல்களையும் எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்முகத்தோடு வரவேற்று வெண்சாமரம் வீசுவதின் மூலம் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே அதிமுக அமைச்சர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நாக்கில் நரம்பில்லாத அமைச்சர்

தமிழர்தம் தொல் பெருமையைப் பறைசாற்றும் கீழடி நாகரீகத்தை தமிழர் நாகரீகம் அல்ல ; அது பாரதப் பண்பாடு என வாய் கூசாமல், நாக்கில் நரம்பின்றி சொன்னவர்தான் தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவே இருக்கிறார் என்பது அதிமுக ஆட்சியின் வெட்கக்கேடான வரலாறு.

பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கும் கல்வியில் சமஸ்கிருதமயமாக்கலுக்கும் வழிவகுக்கும்போது, மொழி உணர்வு கிஞ்சித்துமின்றி அதனை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் துணிந்தவர்கள்தான், அதிமுக அரசின் அமைச்சர்களாகத் திகழ்ந்து, பதவி சுகத்தின் கடைசி சொட்டையும் விடாமல் உறிஞ்சிக் கொள்ள வேண்டுமென்று காத்திருக்கிறார்கள்.

செம்மொழிக்கு எந்த ஆபத்து வந்தால் என்ன ; நம்முடைய ஆட்சிக்கும், அதன் வாயிலாகக் குவித்து வைத்துள்ள ஆஸ்திக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணத்தில் மூழ்கி இருப்பதாலேயே, காவிகள் நச்சு எண்ணம் கொண்டு தங்கள் திட்டங்களைத் தமிழ் மண்ணில் நிறைவேற்றிக்கொள்ளத் தலைப்படும்போதெல்லாம் வாய் மூடி மெளனிகளாய் இருப்பது அதிமுகவின் வழக்கம்.

வள்ளுவர் படத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சி

தமிழ் உணர்வு மிக்கோரின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல ஒரு நிகழ்வு இப்ப்போது நடைபெற்று இருக்கின்றது. பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக! ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உலகத் தத்துவத்தை எடுத்துச் சொன்ன அய்யன் வள்ளுவருக்கு காவி உடை தரித்து அவருக்குக் ‘காவி வண்ணம்’ பூசும் கைங்கர்யத்தைப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சி செய்து இளம் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் அருந்திட்டமான சமச்சீர் கல்வித் திட்டத்தின்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பாடப்புத்தகங்களின் மேலட்டையில் இடம்பெற்றிருந்த அய்யன் வள்ளுவரின் படத்தின்மீது ‘ ஸ்டிக்கர்’ ஒட்டி மறைத்த ஆட்சியின் நீட்சிதானே, இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. எனவேதான் அய்யன் வள்ளுவருக்கு காவி வண்ணம் பூசும் கயமைத் தனத்திற்கு, கல்வித் தொலைக்காட்சியைத் தாரை வார்த்துத்தர துணிந்திருக்கின்றது.

மக்கள் மனதில் கனறும் நெருப்பு

தமிழ்ப்பற்றும், மான உணர்வும்மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது. “மகிமை கொண்ட நாட்டின்மீது மாற்றாரின் கால்கள் ; மலர் பறிப்பதற்கல்ல மாவீரர் கைகள்” என்ற தலைவர் கருணாநிதியின் வைர வரிகளை மனதில் தேக்கிய மானமுள்ளோர், இத்தகைய ஆணவப் போக்கினைத் தடுத்து நிறுத்தியே ஆவர். மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு வரும் தேர்தலில் ஆளும் கட்சி என்ற பேரில் அடிமை சேவகம் செய்வோருக்குத் தக்க பாடம் புகட்டும். பதவியில் எஞ்சி இருக்கும் நாள்களிலாவது மான உணர்வுடன், அய்யன் வள்ளுவருக்கு கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிருப்பினும் அவர்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்கவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் என்ன யூதாஸா? - வைகோ ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.