ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை

author img

By

Published : Dec 15, 2020, 6:01 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Temple land use for govt purpose, notice served, MHC
Temple land use for govt purpose, notice served, MHC

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், கோயில் நிலத்தை நீண்டகாலத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் குத்தகைக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படுகிறது என்ற விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அறநிலைய துறை தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நிலம் குத்தகைக்கு வழங்கப்படும்போது சட்ட நடைமுறை முழுமையாக பின்பற்றப்படும். பயன்பாட்டில் இல்லாத அந்த நிலத்தின் மூலம் மாத வாடகையாக கோயிலுக்கு வருமானம் கிடைக்கும் என தெரிவித்த அவர், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும்போது கோயில் சிதிலமடைந்துள்ளதாகத் தெரிகிறது. அதை சரி செய்யாதது ஏன்? நிலங்கள் எத்தனை ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படுகிறது என குறிப்பிடாதது ஏன்? என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

பின்னர் மனுவுக்கு ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், அறநிலைய துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.