ETV Bharat / state

ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டணி

author img

By

Published : Feb 11, 2022, 7:16 AM IST

தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பயிற்சிகள் வழங்குவதைக் கைவிட்டு, முழுமையாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் கூட்டணி
ஆசிரியர்கள் கூட்டணி

சென்னை: ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி அளிப்பதால் கற்பித்தல் பணி பாதிக்கும் எனவும், இது தேசிய கல்விக்கொள்கையின் உட்கூறாக இருக்கிறது என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் கூறும்போது, "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட இயக்ககம் தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பயிற்சிகள் வழங்குவதைக் கைவிட்டு, ஆசிரியர்களை முழுமையாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021-22ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி மாணவர்களின் கற்றல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே இதுவரை வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் நடைபெற்றுள்ளது. அதுவும் இக்காலகட்டத்தில் மாணவர்களை வகுப்பறைச் சுழலுக்குக் கொண்டுவரும் ஆயத்தப் பணிகளே பெரும்பாலும் நடைபெற்றுள்ளன.

இச்சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகைப் பள்ளிகளும் திறக்கப்பட்டுக் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி முடிய 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட 'கற்றல் விளைவுகள்' பயிற்சியின்போது, குடிப்பதற்கு 'பச்சைத் தண்ணீர்' கூட கொடுக்காத நிலை இருந்தது.

ஆசிரியர்களுக்கே தேர்வு என்பது வேதனை

மேலும், இப்பயிற்சியில் ஒவ்வொரு பயிற்சிக் கட்டகத்தின் முடிவிலும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கொள்குறிவகை வினா மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும், அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பயிற்சிக்கான செலவினமும் வழங்கப்படும் எனவும் மாநில திட்ட இயக்ககம் அறிவித்திருப்பது ஆசிரியர்களை வேதனையடையச் செய்துள்ளது.

இந்த அறிவிப்பு மாணவர்களின் கற்றல் அடைவை அறிய வகுப்பறைகளில் பல சோதனைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கே சோதனையா? அல்லது வேதனையா? என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்குத் தேர்வு என்ற இந்த அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சி அடையும் வரை தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சிக்கான செலவினம் வழங்கப்படும் என்பதும் தேசிய கல்விக்கொள்கை 2020இன் உட்கூறுகள் என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது.

தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக நுழைக்கும் இதுபோன்ற செயல்கள் தொடங்குமானால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை எதிர்த்து களத்தில் இறங்கிப்போராடும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "எங்களை கோழைத்தனமாக தாக்க வேண்டாம்" - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.