ETV Bharat / state

திட்டமிட்டப்படி அக்.13ல் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: டிட்டோ ஜாக் அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 4:34 PM IST

TN Primary school teacher protest: தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக், ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் 13ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

teachers association announces protest 13th as planned by primary education teachers
தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் 13-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் 13-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் 11 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை (டிட்டோ ஜாக்) இயங்கி வருகிறது. இந்த நிலையில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி போராட்டம் நடத்துவது என அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை. அதனைத் தொடர்ந்து டிட்டோ ஜாக், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், வின்சென்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு 30 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வரும் 13-ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.

கோரிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்த கருத்துக்களை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் 13-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதை களைய சொல்லி உள்ளோம். எமிஸ் தளத்தில் வருகை பதிவு, விடுப்பு உள்ளிட்டவற்றை செய்தால் போதும் மற்ற திட்டங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று சொல்லி உள்ளனர். நாங்கள் வரும் 16-ஆம் தேதி முதல் மற்ற புள்ளி விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய மாட்டோம்.

ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எழுத்து பூர்வமாக அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் காலை சிற்றுண்டித் திட்டம், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் தனி இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

தொடக்கக்கல்வித்துறையில் 1 முதல் 8 வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடபோதனையில் முழுமையாக ஈடுபட இயலாத வகையில் தொடர்ந்து எமிஸ் செயலியில் பல்வேறு விபரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணி வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை மையக் கல்வி என்பது இன்று எந்திரமயக் கல்வியாக மாற்றப்பட்டு விட்டது. இதனால் மாணவரின் கற்றல் அடைவு என்பது முழுமையடையாத வகையில் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத காரணத்தால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கல்விப்பணி தவிர பிற பணிகளில் குறிப்பாக எமிஸ் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திட வேண்டும். எண்ணும் - எழுத்தும் திட்டம் முழுமையாகக் கைவிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இஸ்லாமியக் கைதிகளை விடுதலை விவகாரத்தில் முன்னேற்றம் இல்லை - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.