ETV Bharat / state

விதவிதமான முறையில் மோசடி: சைபர் கிரைம் காவல் துறையினர் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

author img

By

Published : Jan 22, 2022, 6:10 PM IST

ஆன்லைனில் பல்வேறு வழிகளில் நடைபெறும் மோசடிகள் குறித்து சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் 'நல்லா யோசிங்க' என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

விழிப்புணர்வு வீடியோ
விழிப்புணர்வு வீடியோ

சென்னை: மத்திய குற்றப்பிரிவில் இயங்கிவரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நாளுக்கு நாள் பல்வேறு விதமான புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதன் அடிப்படையில் சென்னையில் தனியாக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு சைபர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் மோசடி கும்பல்கள் விதவிதமான முறையில் ஆன்லைனில் மோசடிகளை அரங்கேற்றி பொது மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். சென்னை சைபர் கிரைம் காவல் துறையினருக்கு பொதுமக்கள் அதிகம் புகார் அளித்த மோசடிகள் தொடர்பாக 8 விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை,

விழிப்புணர்வு வீடியோ

1. ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்தவர்களை குறிவைத்து பொருள்களை வாங்குவது போல் ஆசை வார்த்தை காட்டி கியூ ஆர் கோடு அனுப்புவதாக பணத்தை மோசடி செய்தல்.

2. பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன் எண்கள் காலாவதி ஆகிறது என செல்போன் நெட்வொர்க் நிறுவனத்திலிருந்து பேசுவதுபோல் பேசி ஒடிபி (OTP) எண்கள் கேட்டு பணத்தை மோசடி செய்வது.

3. பல்வேறு முதலீட்டு செயலிகளில் பணத்தை முதலீடு செய்தால் அதிகளவு லாபம் மற்றும் இரட்டிப்பாக கிடைக்கும் என்று விளம்பரம் செய்து பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தல்.

4. மேட்ரிமோனியில் திருமண வரன் தேடும் ஆண், பெண்களை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதுபோல் ஆசை வார்த்தை காட்டி அவர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்தல்.

5. பிரபலமான விற்பனை இணையதள பெயரில் அதிக அளவு தள்ளுபடியில் பொருள்களை கொடுப்பதாக விளம்பரம் செய்து பொதுமக்களின் பணத்தை மோசடி செய்வது.

6. ராணுவத்தில் பணிபுரிவதாக கூறி இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலம் விற்பனை செய்வதாக கூறி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தல்.

7. சமூக வலைதளத்தில் ஆண்களைக் குறிவைத்து காதலிப்பது போல் நடித்து வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் ஆபாசமாக பேசி அதைப்பதிவு செய்து பணத்தை மிரட்டி பொதுமக்களிடம் மோசடி செய்வது.

8. காப்பீட்டு நிறுவனத்திலிருந்து அழைப்பதாகக் கூறி இன்சூரன்ஸ் பாலிசி முடிவடைய இருப்பதாகவும் உடனடியாக செல்போனுக்கு வந்த ஒடிபி எண்களைத் தெரிவித்தால் காலாவதி ஆவதை தடுக்கலாம் எனக் கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்தல்.

இதையும் படிங்க: காதலியை கரம் பிடித்த அக்‌ஷர் படேல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.