ETV Bharat / state

இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் கூடுதலாக 15% இடஒதுக்கீடு

author img

By

Published : Dec 30, 2021, 7:57 PM IST

தமிழக அரசு ஆணை
தமிழக அரசு ஆணை

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் (B.F.Sc. degree programme) மீனவ சமுதாய மாணவர்களுக்குக் கூடுதலாக 15 விழுக்காடு மிகை இடஒதுக்கீடு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களை 120 லிருந்து 160 ஆக உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

சென்னை: நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் மூன்று உறுப்பு கல்லூரிகளாகிய, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி, டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம், தலைஞாயிறு ஆகிய கல்லூரிகளில் உள்ள 120 இடங்களுக்கு இளநிலை மீன்வள அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையின்போது, மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 5% இடங்கள் சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி ஒதுக்கப்பட்டுவருகிறது.

இதன் அடிப்படையில் தற்பொழுது இப்பல்கலைக்கழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்கள் 120உம், ஐந்து விழுக்காடு சிறப்பு முன்னுரிமை இட ஒதுக்கீட்டின்படி (மிகை ஒதுக்கீடு) மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ஆறு இடங்களும் சேர்த்து, 2020-21ஆம் கல்வியாண்டு வரை சேர்க்கப்பட்டனர்.

இதனடிப்படையில் சேர்க்கப்படும் ஐந்து விழுக்காடு மாணவர்களுக்கான கல்வி, விடுதிக் கட்டணம் ஆகியவற்றுக்கான உதவித்தொகை மீனவர் நல வாரியத்தால் முழுமையாக வழங்கப்பட்டுவருகிறது.

15% மிகை இடங்கள் ஒதுக்கீடு

இந்நிலையில், புதிய அரசின் தொலைநோக்குத் திட்டத்தில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது, கூடுதலாக 15 விழுக்காடு மிகை இடங்கள் மீனவ குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக இளநிலை மீன்வள அறிவியல் பாடப்பிரிவின் சேர்க்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மீன்வள இளநிலை அறிவியல் பட்டப்படிப்பிற்கு சேர விரும்பும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த குடும்பங்களிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்களின் தகுதியின் (Mark) அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். மேலும் இம்மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்ற அனைத்துக் கட்டணங்களையும் மாணவர்களே செலுத்த வேண்டும்.

160 இடங்களாக அதிகரிப்பு

இதன்படி 2021-22ஆம் ஆண்டிற்கான மீன்வள இளநிலை அறிவியல் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் இப்பல்கலைக்கழகத்தால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 120 இடங்களும், ஐந்து விழுக்காடு சிறப்பு முன்னுரிமை இடஒதுக்கீட்டின்படி (மிகை ஒதுக்கீடு) மீனவ குடும்பத்தைச் சார்ந்த ஆறு மாணவர்களும், மேலும் அரசால் தற்பொழுது ஒதுக்கப்பட்டு உள்ள 15 விழுக்காடு மிகை இடஒதுக்கீட்டின்படி 18 மாணவர்களும் மொத்தம் 144 இடங்கள் (120+6+18), ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதனுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென 10 இடங்கள், அயல் நாட்டவர்களுக்கென மூன்று இடங்கள், காஷ்மீரில் குடியேறியோர், காஷ்மீர் பன்டிட்/காஷ்மீர் இந்து குடும்பங்களுக்கென ஒரு இடம், அந்தமான் நிக்கோபார் தீவைச் சார்ந்த மாணவர்களுக்கென இரண்டு இடங்கள் ஆகிய அனைத்து இட ஒதுக்கீடுகளையும் இணைத்து தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்கள் 2021-22 கல்வியாண்டு முதல் 160 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை ஒடுக்க மீண்டும் களமிறங்கும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.