ETV Bharat / state

முதலீட்டாளர்கள் மாநாடு - 60 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

author img

By

Published : Jul 4, 2022, 3:40 PM IST

முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முதலீட்டாளர்கள் மாநாடு
முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7ஆயிரத்து 50 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை தொடங்கிவைத்து, 22 ஆயிரத்து 252 கோடி ரூபாய் முதலீட்டில் 17 ஆயிரத்து 654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31ஆம் நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் தொடக்கம் - மாநிலத்தில் நிதித் தொழில் நுட்பங்கள் பரவலாக பின்பற்றப்படுவதை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ் (TNTecxperience) திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டம் மூலம் தனிநபர்கள், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதி தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்தும் வகையில், நிதி நுட்ப சேவைகளை இலவசமாகவோ அல்லது சில காலத்திற்கு குறைவான கட்டணத்திலோ பெறலாம்.

மேலும், டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் திட்டத்திற்கான இணையதளத்தையும் (https://tntecxperience.com) முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதி தொழில் நுட்ப முதலீட்டுக் களவிழா TN PitchFest தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா (TN PtichFest), முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

வழிகாட்டி நிறுவனமும் , StartupTN நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன. இந்த நிகழ்விற்கான விவரங்களை https://tntecxperience.com/users/tnpitchfest என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். நிதி தொழில் நுட்ப நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த நிகழ்வில், 11 நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

1,497 கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டங்கள் தொடக்கம் - முதலமைச்சர் மொத்தம் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7ஆயிரத்து 50 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினை தொடங்கி வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - 65 ஆயிரத்து 373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58 ஆயிரத்து 478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

22,252 கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் - முதலமைச்சர் 22 ஆயிரத்து 252 கோடி ரூபாய் முதலீட்டில், 17ஆயிரத்து 654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்ட 7 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 59 ஆயிரத்து 871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16 ஆயிரத்து 420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022 வெளியீடு - 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, முதலமைச்சர் உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ வெளியிட்டார்.

தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 வெளியீடு - 2021-22ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, முதலமைச்சர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ வெளியிட்டார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு ஆதரவான தீர்ப்பு என்னவாகும்? - வரும் ஆறாம் தேதி விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.