ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஜடேரி நாமக்கட்டி உள்ளிட்ட மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு!

author img

By

Published : Aug 1, 2023, 10:28 AM IST

தமிழ்நாட்டில் ஜடேரி நாமக்கட்டி, செடிபுட்டா சேலை, மட்டி வாழைப்பழம் ஆகிய மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

geographical indication
தமிழ்நாட்டில் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

சென்னை: இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் 450க்கும் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 56 பொருட்களுக்கு தற்போது வரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மேலும், 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், நெகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய் , உடன்குடி கருப்புக்கட்டி, உள்ளிட்ட 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

உணவுப் பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.

இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டடம் ஜடேரி திருமண் (நாமகட்டி) தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை உதவியுடன் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் செளராஷ்டிரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடிபுட்டா சேலைக்கும், ஏப்ரல் 29ஆம் தேதி நபார்டு மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் அமைப்பு சார்பில், கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, விண்ணப்பித்தார்.

இந்த நிலையில், இந்த மூன்று பொருட்களுக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில், மத்திய அரசு இந்தாண்டு மார்ச் 30 ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. தற்போது நான்கு மாதங்கள் கடந்த நிலையில், விண்ணப்பங்களுக்கு மறுப்புகள் எதுவும் வராத நிலையில், நேற்று (ஜூலை 31) ஐடேரி நாமகட்டி, செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் போன்ற மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்து உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருட்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. அதிகமான புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்ததாக கர்நாடக மாநிலம் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேச மாநிலம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன என்பது இருக்கிறது.

இதையும் படிங்க:இந்து அல்லாதோர் பழனி கோயிலுக்குள் நுழையத் தடை; மீண்டும் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகையால் சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.