ETV Bharat / state

பத்திரம் இல்லாமல் 100 கோடி லோன்; லிங்குடு இன் மூலம் பலே மோசடி.. அம்பலமானது எப்படி?

author img

By

Published : May 8, 2023, 7:54 AM IST

சென்னையில் வட மாநில தொழிலதிபர்களை குறிவைத்து, 100 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

money scam
மோசடி

சென்னை: ஷியாமல் சட்டர்ஜி என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் Galaxy Solar Energy Pvt.Ltd., என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய பணம் தேவைப்பட்ட நிலையில் தரகர்கள் மூலம் அறிமுகமான சென்னை, ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா காலனியில் இயங்கி வந்த East Coast Properties என்ற நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளார்.

பின்னர், ஷியாமல் சட்டர்ஜிக்கு 100 கோடி லோன் தொகை 9.6% வட்டிக்கு, பாதுகாப்பு பத்திரம் இல்லாமல் தங்கள் நிறுவனத்தின் மூலம் கொடுப்பதாக நம்ப வைத்து அதற்கு 6 மாத வட்டியாக முன்தொகை ரூ.4 கோடியை கொடுக்க வேண்டும் என்று கூறி நம்ப வைத்துள்ளனர். மோசடி கும்பல் கூறியதை நம்பி East coast properties நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு ரூ.3.50 கோடியை RTGS மூலமும், ரொக்கமாக ரூ.50 லட்சமும், மொத்தம் ரூ.4 கோடியை கொடுத்துள்ளார்.

ஆனால் ஷியாமல் ஷட்டர்ஜிக்கு எந்த விதமான கடன் தொகையை கொடுக்காமலும், வாங்கிய 4 கோடி பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தருமாறு கடந்த மாதம் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த அந்த புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் சார்பில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலிசார் தேடி வந்தனர். இந்நிலையில் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின்பேரில், ஆவணம் மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுமதி தலைமையில், அமைக்கப்பட்ட தனிப்படையினர் மேற்படி முக்கிய குற்றவாளிகளான பன்னீர்செல்வம் (43), இம்தியாஷ் அகமது (எ) சத்தீஷ்குமார் (37) மற்றும் பவன்குமார் (எ) ரவி (எ) நியமத்துல்லா (45) ஆகியோரை கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள சொகுசு விடுதியில் வைத்து கைது செய்தனர்.

விசாரணை செய்ததில், அவர்கள் லிங்க்டு இன் என்ற இணையதளம் மூலமாகவும், வட மாநிலங்களில் விளம்பரங்கள் செய்தும் வட மாநில தொழிலதிபதிபர்களை குறி வைத்து கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. எந்தவித பிணை பத்திரங்களும் இல்லாமல், சொத்து பத்திரங்கள் இல்லாமல் கடன் தருவதாக விளம்பரம் செய்ததால் பல தொழிலதிபர்கள் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கடன் வழங்குவது போன்ற தகுதி உடைய நிறுவனம் என்பதை நிரூபிப்பதற்காக ஈசிஆரில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து பணம் படைத்தவர்களாக காட்டி நாடகமாடி மோசடி செய்வதே இந்த கும்பலின் வாடிக்கையாகும். தற்போது இந்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கார்த்திக், காமராஜ் மற்றும் சதாம் உசேன் ஆகிய மூவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது, மொத்தமாக இந்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடனாக ஏற்பாடு செய்யக்கூடிய தொகைக்கான ஆறு மாத வட்டி தொகை முன்கூட்டியே செலுத்தினால் மட்டுமே கடன் தரப்படும் என நம்ப வைத்து பல தொழிலதிபர்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளனர். தொழிலதிபர்கள் கேட்ட நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பணம் கேட்கும் போது தந்தை இறந்து விட்டதாக காலம் தாழ்த்தி தொழிலதிபர்களை ஏமாற்றுவோம் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் விசாரணையில், இவர்கள் மீது வடமாநிலங்களில் புனேவில் 3 வழக்குகளும், டெல்லியில் 1 வழக்கும், தானேவில் 1 வழக்கு, ஜார்கண்டில் 1 வழக்கு என பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கும்பலில் முக்கிய நபர்களாக கைது செய்யப்பட்ட மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 80 மற்றும் 90களில் சென்னையில் மோசடி மன்னனாக வலம் வந்த மண்ணடியைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரிடம் அடியால் மற்றும் ஓட்டுனராக பணிபுரிந்த நபர்கள் என்பதும், அஷ்ரபுக்கு இறந்த பிறகு கும்பலாக ஒன்று சேர்ந்து இந்த மோசடியில் இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரை 5 கோடிக்கு மேல் பணத்தை மோசடி செய்த இந்த கும்பலிடம் இருந்து பணத்தை மீட்கும் பணியில் போலிசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விசாரணைக்காக புனே போலிசார் கும்பலில் மூளையாக செயல்பட்ட கார்த்திக் என்பவரை அழைத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து எவ்வளவு மோசடி செய்துள்ளார்கள் என்பதைக் கண்டறியவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: RR VS SRH : அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா ஐதராபாத்.. அனல் பறக்கும் ஆட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.