ETV Bharat / state

ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

author img

By

Published : Jan 8, 2023, 9:00 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்க உள்ளது. இந்த ஆளுநர் உரையில் மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதியத் திட்டங்கள் குறித்து உரையில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது சட்டப்பேரவை
ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது சட்டப்பேரவை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். சுமார் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் ஆளுநர் உரையை சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு தமிழாக்கம் செய்து வாசிப்பார்.

சபாநாயகரின் உரையுடன் நாளைய சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவுபெறும். அதன்பிறகு சபாநாயகர் தலைமையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சேர்ந்து அலுவல் ஆய்வு கூட்டத்தை நடத்தி, இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என முடிவு செய்வார்கள்.

காகிதமில்லா சட்டப்பேரவை: 100 விழுக்காடு தொடு திரை உதவியுடன் கணினி மூலம் காகிதம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கலைவாணர் அரங்கத்தில் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை பேரவை ஜார்ஜ் கோட்டையில் கூடுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதன்முறையாக அமைச்சராக சட்டப்பேரவை செல்லும் உதயநிதி ஸ்டாலின்: கடந்த 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உறுப்பினராக உதயநிதி முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். உதயநிதி அமைச்சராக கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவை என்பதால் அவருக்கான இடம் எங்கு வழங்கப்படும் என்ற பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

அதிமுகவின் நிலைப்பாடு என்ன? அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடரும் சூழலில் அது சட்டப்பேரவையிலும் நாளை எதிரொலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் ஈபிஎஸ் அணியினர் பொதுக்குழு மூலம் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதால் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அமரும் இடத்தை மாற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவையைப் புறக்கணித்தனர். எனவே, கடந்த முறை போலவே தற்போதும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவையைப் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் இறந்த சட்டமன்ற உறுப்பினருக்கு இரங்கல்: நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவை ஒட்டி, அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக, அதிமுக பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எம்ஆர்பி செவிலியர்கள் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.