ETV Bharat / state

"மக்களை சாதியால், மதத்தால், பிரிப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது" - முதலமைச்சர் ஸ்டாலின்!

author img

By

Published : May 6, 2023, 3:42 PM IST

மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்துப் பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin
MK Stalin

சென்னை : தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தயையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசு சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை, புதுமை பெண் திட்டத்தின் கீழ் 10 மாணவிகளுக்கு உயர் கல்வி உதவித் தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களில் 5 பேருக்கு கேடயங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது, "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், உங்களால் மறக்க முடியாத குரல் இது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுடைய அன்போடு, ஆதரவோடு முதலமைச்சர் பொறுப்பில், தமிழ்நாட்டைப் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்.

மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா, எடுத்துக் கொண்ட பணியை முடித்துக் காட்ட முடியுமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டபோது, என் மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் மூன்று பேர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சனாதனத்தால் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழ் மக்களை, திராவிட இனத்தை தன்னுடைய 95 வயது வரையில் ஓயாத உழைப்பால் சுயமரியாதை கொண்ட சமுதாயமாக மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார். சுயமரியாதை பெற்ற இனம் தனக்கான உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தோடு ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சி அமைத்துக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றிக் காட்டக் கூடிய சாதனைகளை, திட்டங்களை, அதன் மூலமாக ஆட்சி என்பதற்கான இலக்கணம் என்ன என்பதை இந்தியாவிற்கே வழிகாட்டியவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இவர்கள் மூன்று பேரையும் மனதில் நினைத்துப் பார்த்தேன்.

அவர்களோடு அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவானந்தம், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் உள்ளிட்டவர்களும் என் மனதில் தோன்றினார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றிக் காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையும் தைரியமும் தானாக எனக்கு வந்து விட்டது.

மக்களுக்காகப் பணியாற்றுவது என்பது எனக்கு புதிதல்ல. பிறந்து வளர்ந்ததே பொது வாழ்க்கையுடைய அத்தனை தன்மைகளையும் எதிர்கொண்ட கோபாலபுரம் வீட்டில்தான். சிறுவனாக, இளைஞனாக வளர்ந்த போதே திராவிட இயக்கத்துக்கு என்னை ஒப்படைத்துக் கொண்டு, தலைவர் கலைஞருடைய கட்டளையை மீறாமல் பணியாற்றி வந்திருக்கிறேன்.

50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கிறேன். பல சோதனைகளை நான் சந்தித்து இருக்கிறேன். "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்றார் பேரறிஞர் அண்ணா. "இதையும் தாங்கிப் பழகு" என்று எனக்கு கற்றுக் கொடுத்தார் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தன்னைத் தாக்குபவர்களையும் தாங்கி நிற்கிற நிலம் போன்றது நம்முடைய திராவிட இயக்கம்.

அதனால்தான், சட்டமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்று, அந்த வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய ஓய்விடத்திற்குச் சென்று அங்கே அதைக் காணிக்கையாக்கி, அப்போது நான் சொன்னேன், "எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து செயல்படக்கூடிய அரசாக எங்கள் அரசு இருக்கும்".

இதை பத்திரிகையாளர்களிடமும் அன்றைக்கு நான் சொன்னேன். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதலமைச்சர். இது தமிழ்நாட்டு மக்கள் தந்த பொறுப்பு. அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை. என்னால் முடிந்த அளவு பணியாற்றுகிறேன், ஓய்வின்றிப் பணியாற்றுகிறேன், என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன்.

அந்த உழைப்பின் பயனை தமிழ்நாட்டு மக்களான உங்களுடைய முகங்களில் பார்க்கிறேன். நீங்கள் பேசுகிற வார்த்தைகளில் கவனிக்கிறேன். நீங்கள் காட்டுகின்ற அன்பில் கரைகிறேன். நீங்கள் என்னை நம்பி ஒப்படைத்த பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறேன் என்பது என் மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.

இந்த இரண்டு ஆண்டுகளில் நம்முடைய அரசு நிறைவேற்றிய திட்டங்களால் பயனடைந்தவர்கள் இங்கே பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையும் உதட்டிலிருந்து வரவில்லை, அவர்களுடைய இதயத்தில் இருந்து வருகிறது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கிறவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுடைய மகிழ்ச்சியும் உங்களுடைய புன்னகையுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருக்குறள் சொல்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வது திராவிட மாடல். மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்துப் பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது.

தமிழ்நாட்டுக்கு விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து ஆட்சியில் உட்கார வைத்த மக்களுக்கு, அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது நன்றாகப் புரியும். மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருக்கின்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம் கடமையை செய்தால் போதும் என்கிற குறிக்கோளுடன் நான் செயல்படுகிறேன்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத்தை தமிழ்நாட்டில் இருக்கிற 234 தொகுதிகளுக்கும் நான் நடத்தினேன். மக்களிடம் மனுக்களை பெற்றபோது நான் சொன்னது, உங்கள் கவலைகளை – உங்கள் கோரிக்கைகளை - உங்கள் எதிர்பார்ப்புகளை – என்னிடம் ஒப்படைத்து இருக்கிறீர்கள்”.

இனி இதெல்லலாம் என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் இதற்கெல்லாம் 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று உறுதி கொடுத்தேன். சொன்னதைச் செய்வதுதான் திராவிட மாடல். மனு கொடுத்தவர்கள் எங்களுக்கு வாக்களித்தவர்களா, வாக்களிக்காதவர்களா, என்று பிரித்துப் பார்க்கவில்லை.

தி.மு.க ஜெயித்த தொகுதியா, தோற்ற தொகுதியா என்று பார்க்கவில்லை. பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் இன்றைக்கு நிறைவேற்றி இருக்கிறோம். இன்றைக்குக் கூட இந்த நிகழ்ச்சியில் சாதனைகளை மட்டும் சொல்லுகிற நிகழ்ச்சியாக இல்லாமல் புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களின் கீழ் ஆணைகளும், ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்குகின்ற விழாவாகவும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது, இரண்டாண்டு காலமாக ஏழை மக்களின் நலன் காக்கக் கூடிய குடியிருப்பாக மாறியிருக்கிறது. தலைமைச் செயலகம் என்பது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்ற உழைக்கும் முதன்மைச் செயலகமாக மாறி இருக்கிறது. இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகாரம் முகம் அல்ல, அன்பு. இந்த ஆட்சியின் முகம் என்பது ஆணவம் அல்ல, ஜனநாயகம்.

இந்த ஆட்சியின் முகம் என்பது அலங்காரமல்ல, எளிமை. இந்த ஆட்சியின் முகம் என்பது சர்வாதிகாரமல்ல, சமத்துவம். இந்த ஆட்சியின் முகம் என்பது சனாதனமல்ல, சமூகநீதி. அதனால் தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது. நமது ஆட்சி என்பது, சமூக நீதி, சமநீதி, சுயமரியாதை, சமதர்மம், சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆட்சி.

இரண்டு ஆண்டுகளை முடித்து விட்டு, இப்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் வாழும் எட்டு கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் நன்மையை அடைந்திருக்கும் ஆட்சியாக நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கிறது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க : இந்தி, ஆங்கிலம் மட்டுமே.. தமிழ் இல்லாமல் மதுரை பல்கலைக்கழக விண்ணப்பம்.. மாணவர்கள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.