ETV Bharat / state

மருத்துவப் பணியாளர் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு!

author img

By

Published : Oct 23, 2022, 7:40 PM IST

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளர் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு
மருத்துவ பணியாளர் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு

சென்னை: இது குறித்து அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நடைபெறும் அரசுப்போட்டித் தேர்வுகளில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று அதிகம் தேர்ச்சி பெற்று தமிழர்களுக்கு வேலையில்லாமல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்ட நிலையில், இதனைத்தடுக்கும் விதமாக அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தற்போது மருத்துவப் பணியாளர் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்துப் போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழித் தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டது.

மேலும் இந்தத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் குறைந்தபட்சமாக 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நடப்பு ஆண்டில் நடைபெற்ற குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தற்போது தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, துறைமுகம், விமான நிலையங்கள், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் வெளிமாநிலத்தைச்சேர்ந்தவர்கள் பணியில் இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால் மருத்துவப்பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது மருத்துவப்பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் ஆனது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அரசாணையில் தமிழ் மொழித்தாளுக்குரிய பாடத்திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் மொழித்தேர்வு 50 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடத்தப்படும் எனவும்; இத்தேர்வில் குறைந்தபட்சமாக 40 விழுக்காடு மதிப்பெண்கள் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.