ETV Bharat / state

ரயிலில் தள்ளி மாணவி கொலை... கைது செய்யப்பட்ட இளைஞர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

author img

By

Published : Nov 5, 2022, 11:04 AM IST

Updated : Nov 5, 2022, 2:15 PM IST

சென்னையில் ரயிலில் தள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை வழக்கில் கொலையாளி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை வழக்கில் கொலையாளி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13ஆம் தேதி தனியார் கல்லூரி மாணவி சத்யாஸ்ரீ, சதீஷ் என்ற வாலிபரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மகள் இறந்த சோகத்தில் மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கமும் அன்றைய தினம் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு கடந்த 14 ஆம் தேதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையில் காவல் ஆய்வாளர் ரம்யா விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டு, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சிபிசிஐடி போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தும், மாணவி சத்யாஸ்ரீயின் குடும்பத்தாரிடமும் விசாரணையும் மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் கைது செய்யப்பட்ட சதீஷையும், சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வேறு ஒருவருக்கு சத்தியஸ்ரீயை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து நிச்சயிக்கப்பட்டதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தார். அதேபோல, சம்பவம் நடைபெற்றபோது மாணவி சத்யாவுடன் இருந்த சக மாணவிகள் 3 பேரிடமும் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று பரங்கிமலை ரயில் நிலையில், சம்பவத்தின் போது எந்த வேகத்தில் ரயில் வந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என, ரயில் வல்லுனர்களுடன் சிபிசிஐடி நேரடியாக சென்று, சத்தியஸ்ரீ போன்ற பொம்மை ஒன்றை தயார் செய்து, சம்பவத்தின் போது அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் மற்றும் சத்தியஸ்ரீயோடு இருந்த தோழிகள் ஆகியோர் முன்னிலையில், கொலையாளி சதீஷ்க்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைத்து கொலை எவ்வாறு நடைப்பெற்றது, என்ற ஒத்திகை ஒன்றை நடத்தி சிபிசிஐடி போலீசார் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் அக் ஐ.பி.எஸ், டி.எஸ்.பி செல்வகுமார், இன்ஸ்பெக்டர் ரம்யா, ஆகியோரின் பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக கல்லூரி மாணவி சத்யஸ்ரீயின் மரணம் போன்று, வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிசிஐடி சென்னை அலுவலகத்தில் முதல்முறையாக இது போன்ற வழக்கில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு: கைதான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

Last Updated :Nov 5, 2022, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.