ETV Bharat / state

சென்னை விமானநிலையத்தில் கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்க நடவடிக்கை!

author img

By

Published : Jul 24, 2023, 1:55 PM IST

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் நெரிசலை குறைக்க கூடுதலாக மற்றொரு உள்நாட்டு முனையம் அமைக்கும் நடவடிக்கை தொடங்க உள்ளது.

Steps to set up an additional domestic terminal at Chennai airport
சென்னை விமானநிலையத்தில் கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்கும் நடவடிக்கை

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம் உள்கட்ட அமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் நவீன விமான நிலையமாக 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூபாய் 2,467 கோடி திட்டத்தில் இரண்டு கட்டங்களாக கட்டுவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018ஆம் ஆண்டில் முடிவு செய்து பணிகளைத் தொடங்கியது. அதில் முதல் கட்டப் பணி 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

இதனை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முறைப்படி திறந்து வைத்தார். இதை அடுத்து புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் டெர்மினல் 2 (டி2) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியில் இருந்து சோதனை ஓட்டங்கள் நடக்கத் தொடங்கின. அதன் பின்பு படிப்படியாக சர்வதேச புறப்பாடு, வருகை விமானங்கள் புதிய முனையத்திற்கு மாற்றப்பட்டு வந்தன.

இந்த ஜூலை 7ஆம் தேதியில் இருந்து புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் டெர்மினல் 2 முழு அளவில் இயங்கத் தொடங்கி விட்டன. இதை அடுத்து ஏற்கனவே சர்வதேச விமானம் முனையமாக செயல்பட்டு வந்த, டெர்மினல் 3 மற்றும் டெர்மினல் 4 இம்மாதம் 10ஆம் தேதியில் இருந்து முழுமையாக மூடப்பட்டு உள்ளது. அடுத்த சில வாரங்களில் டெர்மினல் (டி3) இடிக்கும் பணி தொடங்க இருக்கிறது.

அது முழுமையாக இடிக்கப்பட்ட பின்பு சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கு இடையே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தற்போது பயணிகள் போக்குவரத்து விமான சேவைகள் போன்றவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதனால் தற்போதைய உள்நாட்டு விமான நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

எனவே தற்போதைய உள்நாட்டு விமான நிலையத்தில் இட நெருக்கடி காரணமாக கூடுதல் விமான சேவைகள் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதை அடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்ட டி3, டி4 தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளன.

டி3 புதிய முனையம் கட்டுமான பணிக்காக இடிக்கும் நிலையில் இருக்கிறது. ஆனால், டி4, புதிதாக கட்டப்பட்ட கட்டடம் என்பதால் நல்ல நிலையில் உள்ளது. எனவே டி4 முனையத்தை, புதிய உள்நாட்டு முனையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் தற்போது மூடப்பட்டுள்ள பழைய சர்வதேச முனையமான டி3 மற்றும் டி4 ஆகியவற்றில் உள்ள குடியுரிமைச் சோதனை அறைகள், சுங்கச் சோதனை பிரிவு அறைகள் ஆகியவைகள் அகற்றப்பட்டு, அவைகள் உள்நாட்டு முனையமாக மாற்றப்படும் பணிகள் தொடங்கி உள்ளன. அடுத்த ஓரிரு மாதங்களில் இப்பணிகள் நிறைவடைய உள்ளது. அதன் பின்பு வரும் செப்டம்பர் மாதத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக இயங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

இப்போது உள்நாட்டு முனையமாக உள்ள டி1 முனையத்தில், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஏர் ஏசியா, ஆகாஷா, அலையன்ஸ் ஏர், ட்ரூ ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் உள்நாட்டு விமான சேவைகளையும், புதிதாக உருவாக்கப்படும் டி4 உள்நாட்டு முனையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்களையும் இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு சென்னை உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுவதால் சென்னையில் இருந்து கூடுதலாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படும். அதோடு பயணிகளுக்கும் தாராளமாக இட வசதி கிடைக்கும். விமான நிலையத்தில் நெரிசல்கள் குறையும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் ஜி20 பேரிடர் பணிக்குழு கூட்டம் - பருவநிலை சுற்றுச்சூழல் குறித்து ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.