ETV Bharat / state

"உதயநிதி தலைக்கு பரிசு என்பது வேடிக்கைப் பேச்சு... ராமநாதபுரத்தில் திமுகவுக்கு ஆதரவு இல்லை" - சீமான் அடுத்தடுத்து அதிரடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 1:05 PM IST

Seeman talks about Sanatana Controversy: உதயநிதி ஸ்டாலின் சனாதன சர்ச்சை மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் குறித்த அண்ணாமலையின் விமர்சனம் ஆகியவற்றிற்கு பதிலடி கொடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

உதயநிதி தலைக்கு பரிசு என்பது வேடிக்கைப் பேச்சு - சீமான் பேட்டி
உதயநிதி தலைக்கு பரிசு என்பது வேடிக்கைப் பேச்சு - சீமான் பேட்டி

உதயநிதி தலைக்கு பரிசு என்பது வேடிக்கைப் பேச்சு - சீமான் பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செ.5) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "ஒரு நாட்டின் வளத்தில் சிறந்த வளம் அறிவு செல்வம். அந்த அறிவை உருவாக்கின்றவர்கள் ஆசிரியர்கள். தாய் - தந்தை உலகத்தை காட்டுகின்றனர், ஆசிரியர்கள் தான் உலகத்திற்கு நம்மை காட்டுகின்றனர்.

நம்மை சிற்பி போல் செதுக்கி அறிவாளி ஆக்குவது ஆசிரியர்கள். எனவே ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என்ற அறிவிப்பது வேடிக்கையானது. கலைஞர் இருந்த காலத்தில் ராமர் எந்த கல்லூரியில் படித்தார் என கலைஞர் கேட்ட போது, அதற்கு இதே போல சில வட இந்திய சாமியார்கள் அவரது நாக்கை அறுத்து வாருங்கள் பரிசு தருகிறோம் என அறிவித்தார்கள். அதுபோல இதுவும் ஒரு வேடிக்கை.

உதயநிதி சொல்லக் கூடிய கருத்தை கருத்தாகத் தான் ஏற்க வேண்டும். கழுத்தை அறுத்து வா என்பது எப்படிப்பட்ட பேச்சு. தலையை வெட்டி வா என்பவன் ரவுடி. பொறுக்கி எப்படி சாமியார் ஆக முடியும். இங்கு முதலில் சனாதனம் பற்றி விளக்கிப் பேச யாராவது இருக்கிறார்களா?, மானுட பிறப்பில் உயர்வு, தாழ்வு பார்ப்பது எப்படி தர்மம் ஆகும். எல்லா உயிர்களும் சமம் தான். எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அண்ணாமலை நேற்று (செப்.4) தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து நாம் தமிழர் கட்சி, திமுகவின் பி டீம் (B Team) எனக் கூறி சீமான் பயந்ததாகத் தெரிவித்தது குறித்து பதில் அளித்த சீமான், "பயப்படுவது என் பரம்பரைக்கே கிடையாது. அஞ்சுவதும் அடிபணிவதும் எங்கள் இன பரம்பரைக்கு கிடையாது. பயம் கோழையின் தோழன் வீரனின் எதிரி. 13 ஆண்டுகளாக வழக்கு சிறையை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

அண்ணாமலை சிறைக்கு போய் இருக்கிறாரா? அவர் மீது ஒரு வழக்கு உண்டா? என் மீது 128 வழக்குகள் உள்ளன. திமுக ஊழல் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை அதிமுகவின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை? காரணம், கூட்டணியை விட்டு கழற்றி விடுவார்கள். அதிமுகவிற்கு அண்ணாமலை பயப்படுகிறார்.

சேகர்பாபுவிற்கு அண்ணாமலை சவால் விட்ட மாதிரி, பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என நான் சவால் விடுகிறேன். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சேகர்பாபுவை தேர்தலில் மக்கள் தான் தோற்கடிக்க வேண்டும். சனாதனம் இன்று தோன்றியதா? ஆட்சியில் இருக்கும் போது அதை வேர் அறுக்க என்ன செய்தீர்கள்.

தேர்தல் வரும் போது சனாதனத்தை பற்றி பேசுவது ஏன்? வீட்டில் சனாதனத்தை ஒழிக்க முடியவில்லையே. சனாதனம் என்பதை பற்றி உதயநிதி விளக்கிப் பேச வேண்டும். மனித பிறப்பில் ஏற்ற தாழ்வு இருக்கு எனக் கூறுவதை நாம் மறுக்க வேண்டும். ஜாதி, மதம் அனைத்தும் தமிழ் இனத்திற்கு திட்டமிட்டு ஊட்டப்பட்ட ஒன்று.

மொழி, இன பற்றை ஊட்டினால் ஜாதி, மதத்தை ஒழிக்க முடியும். பொது தொகுதியில் பழங்குடி இன மக்களை நிற்க வைக்க முடியுமா? ஜெயலலிதா திருச்சியில் தலித் எழில்மலையை நிற்க வைத்தார். துணை முதலமைச்சர் பதவியை தாழ்த்தப்பட்டவருக்கு தர முடியுமா?வார்த்தையால் சொல்லாமல் செயலில் காட்ட முடியுமா?

பல்லடத்தில் குற்றவாளிகளை வேலைக்குச் சேர்த்து பின்னர் நீக்கியதால் குடிபோதையில் கொலை செய்து உள்ளனர். கொடூர எண்ணம் வர, மது தான் காரணம். குற்றம் செய்வதை விட குற்றம் செய்யத் தூண்டியவனைத் தான் தண்டிக்க வேண்டும். மானம் உள்ளவர்கள் மீது வழக்கு போட்டால் நஷ்ட ஈடு வாங்க முடியும்.

மானம் உள்ள ஆயிரம் பேரிடம் சண்டை போடலாம். மானங்கெட்ட ஒருவனிடம் சண்டையே போட முடியாது என பெரியார் சொல்கிறார். மானம் கெட்ட ஒருத்தியிடம் நானும் சண்டை போட முடியுமா? இதனால் அமைதியாக இருந்தேன். எங்களை பா.ஜ.கவின் பி டீம் என திமுக சொல்லி வந்தது.

இப்போது திமுகவின் பி டீம் என அண்ணாமலை சொல்கிறார். நான் தான் மெயின் டீம். நான் தனித்து தான் போட்டியிடுவேன். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசை கூட்டணியில் சேர்க்காதீர்கள். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சருக்கு எண்ணம் வரவில்லை.

இந்தியாவைத் தாண்டி மாநில மக்கள் நலன் முக்கியமாக இருக்கும் போது, தமிழக முதலமைச்சருக்கும் மாநில மக்கள் நலன் முக்கியமாக இருக்க வேண்டும். யார் பிரதமர் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்யலாம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி மலரும். மாநில கட்சிகள் முடிவு செய்யும் கூட்டணி ஆட்சி வந்தால் தான் கூட்டாட்சி மலரும்.

பொது எதிரியாக காங்கிரஸ், பா.ஜ.க. ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் அங்கு நாம் தமிழர் சார்பில் இஸ்லாமிய தங்கையை தேர்வு செய்து வைத்து உள்ளேன். தாமரையுடன் உதயசூரியன் நேரடியாகப் போட்டியிட்டால் நான் ஆதரிக்கிறேன். திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போட சொல்லுங்கள்.

அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்கு போடாதீர்கள் என சொல்லுங்கள். சீமானுக்கு ஓட்டு போடாதே என சொல்லாதீர்கள். திமுக பாவியாக இருந்தாலும் காவியை எதிர்க்க வேண்டும். இந்த தூய ஆவியை வைத்து எதிருங்கள். என்னை வளர விட்டால் 2 பேருக்கும் ஆபத்து என்பதால் எதிர்க்கிறார்கள்" என்று சீமான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Annamalai Vs Udhayanidhi: வடக்கே ராகுல் காந்தி, தெற்கே உதயநிதி ஸ்டாலின் - அண்ணாமலை விமர்சனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.