ETV Bharat / state

புத்தாண்டிலும் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.. அரசாணை வெளியிடும் வரை தொடரும் என அறிவிப்பு..

author img

By

Published : Jan 1, 2023, 2:14 PM IST

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான குழு குறித்த முழு விவரத்துடன் அரசாணை வெளிவரும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்தார்.

புத்தாண்டிலும் போராட்டத்தை தொடரும் இடைநிலை ஆசிரியர்கள்
புத்தாண்டிலும் போராட்டத்தை தொடரும் இடைநிலை ஆசிரியர்கள்

புத்தாண்டிலும் போராட்டத்தை தொடரும் இடைநிலை ஆசிரியர்கள்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 6ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில் 180-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றப் பின்னரும் மீண்டும் போராட்டக் களத்தில் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டான இன்றும் கடும் பனியிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படு, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது என அறிவித்தார்.

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருவதால் ஆசிரியர்கள் சிரமான சூழலை சந்தித்து வருகின்றனர். இதுவரை 187 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்கிறோம். இருப்பினும் இந்த குழு குறித்த முழு விவரம் பொருந்திய அரசாணை வெளிவரும் வரை போராட்டம் தொடரும்.

ஊதிய உயர்வு குறித்து இதுவரை குழு அமைக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் நாங்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளோம். 13 ஆண்டுகளாக ஊதிய உயர்வு பெறாமல் உள்ளோம். இந்த குழு எப்போது விசாரணையை தொடங்கும், எப்போது அறிக்கையை சமர்ப்பிக்கும், அதுவரை எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படுமா? உள்ளிட்ட அனைத்து விவரங்கள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “ஏற்கனவே 13 ஆண்டுகள் கடந்து உள்ளதால் விசாரணை காலம் அதிகமாக இருந்தால் ஏற்றுகொள்ள முடியாது. இதுகுறித்த முழு விவரம் தெரிந்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ஒரே கல்வித் தகுதியுடன் பணிபுரியும் எங்களுக்கு துப்பரவு பணியாளர்களை விட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட எங்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் 3,170 வேறுபாடு உள்ளது. நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை கேட்கவில்லை.

அடிப்படை ஊதியத்தை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என கேட்கிறோம்” என்றார். மேலும், “நாங்கள் இதுவரையில் விடுமுறை நாட்களில் மட்டுமே மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தி வந்திருக்கிறோம். முதல்முறையாக வேலை நாட்களில் போராட்டத்தை நடத்துகிறோம். இப்போதும் மாணவர்களுக்கான கல்வி பாதிக்கப்படவில்லை. எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் இங்கேயே இருக்கிறோம். எங்களின் கோரிக்கை குறித்து தெளிவான அரசாணை வரும் வரையில் தொடர்ந்து போராடுவோம். எண்ணும் எழுத்தும் பயிற்சியையும் புறகணிப்போம்.

ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் விதை நெல்லுக்கு செலவிடுவது போன்றது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை குழுவில் 9 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களிடம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற எவ்வளவுத் தொகை செலவாகும் என்பதையும் தெரிவித்துள்ளோம். எனவே நிதி செலவினம் குறித்து தெரியாது என கூற முடியாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.