ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் 'முன்னாள் மாணவர் மன்றம்' - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

author img

By

Published : Jun 27, 2023, 12:33 PM IST

வருகிற ஜூலை 20ஆம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 பேரை emisஇல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

அரசுப் பள்ளிகளில் ‘முன்னாள் மாணவர் மன்றம்’ - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
அரசுப் பள்ளிகளில் ‘முன்னாள் மாணவர் மன்றம்’ - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: இது தொடர்பாக பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ''மாணவர்கள் தங்கள் பள்ளிக் காலத்தை முடித்த பின்பும், அவர்களது வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் தொடர்ச்சியாக நம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உடன் பயணிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் செயல்படுவதை எண்ணி பள்ளிக்கல்வித்துறை பெருமை கொள்கிறது.

இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியைப் பற்றியும், அவர்கள் தொடர்ச்சியாக பள்ளியின் மீது ஈடுபாடும், பொறுப்பும் உள்ள நபர்களாக பயணிப்பதைப் பற்றியும் மண்டல அளவில் பள்ளியின் மிக முக்கிய பங்குதாரர்களான முனைப்புடன் வந்த தலைமை ஆசிரியர்களுடன் ‘குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல்’ கடந்த மே 23, 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும், அனுபவங்களையும் மிக ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடி இந்த முயற்சிக்கு உத்வேகமும், நம்பிக்கையையும் அளித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இதில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், முன்னாள் மாணவர்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு முதற்கட்டமாக ஒவ்வொரு அரசுப் பள்ளியின் மீதும் பொறுப்பும், நலனும் கொண்ட ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் 25 முன்னாள் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் ஆர்வம், திறமை மற்றும் நேரத்தை மனதில் கொண்டு தொடர்ச்சியாக பள்ளியுடன் பயணிப்பதை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவர்களைக் கண்டறிவதற்கான பரிந்துரைகள்:

  1. நீண்ட காலமாக அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூலம் இம்முயற்சியை மேற்கொள்ளலாம்.
  2. படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக இம்முயற்சியை மேற்கொள்ளலாம்.
  3. பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக முன்னாள் மாணவர்களைக் கண்டறியலாம்.
  4. பள்ளியின் தலைமை ஆசிரியரால் கண்டறியப்பட்ட முன்னாள் மாணவர்கள் வாயிலாக முன்னாள் மாணவர்களைக் கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.
  5. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வாயிலாக முன்னாள் மாணவர்களைக் கண்டறியலாம்.
  6. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் அல்லது ஆசிரியர்கள் வாயிலாக மேற்கொள்ளலாம்.

முன்னாள் மாணவர்கள் தொடர்ச்சியாக பள்ளியுடன் பயணிப்பதற்கான வழிமுறைகள்:

  1. முதற்கட்டமாக, அரசுப் பள்ளியின் நலன் மீது பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களை வருகிற ஜூலை 20ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டும்.
  2. அவ்வாறு கண்டறியப்பட்ட முன்னாள் மாணவர்களின் தகவல்களை tnschools.gov.in என்ற இணையதளப் பக்கத்தில், முன்னாள் மாணவர்களுக்கான படிவத்தில், சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்
  3. முன்னாள் மாணவர்கள் கல்லூரி செல்பவராக, பணியில் உள்ளவராக, உள்ளூர் மற்றும் வெளியூரில் இருக்க வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்குக் கிடைக்கும் நேரம், ஆர்வம் மற்றும் தனித்திறமை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கேட்டறிந்து முன்னாள் மாணவர்களுடன் இணைந்து பயணித்து, அவர்களின் தொடர்ச்சியான வருகையை உறுதி செய்யலாம்.
  4. பள்ளிக்கல்வித் துறை பல மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கலை மற்றும் கலாசாரம், உயர்கல்வி வழிகாட்டல், பள்ளியில் பதிவு செய்யப்படாத மற்றும் இடை நின்ற மாணவர்களைப் பள்ளியுடன் இணைத்தல், விளையாட்டு, வானவில் மன்றம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியுடன் இணைத்தல் போன்ற முன்னெடுப்புகளில் முன்னாள் மாணவர்களைப் பள்ளியுடன் ஒருங்கிணைத்து, அவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் இச்செயல்பாடுகளில் இணைத்து செயல்படலாம்.
  5. முன்னாள் மாணவர்கள் பள்ளியுடன் இணைந்து செயல்பட ‘முன்னாள் மாணவர்கள் மன்றம்’ அமைக்கப்பட வேண்டும்.
  6. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜனவரி மாதத்தில் முன்னாள் மாணவர்கள் கூடுகையை கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த முயற்சியில் பள்ளிக் கல்வித்துறையுடன் ஒவ்வொரு அரசுப் பள்ளியும் இணைந்து முழுஒத்துழைப்புடன் செயல்பட அனைத்து வகை அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருகிற ஜூலை 20ஆம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 பேரை emisஇல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்
வருகிற ஜூலை 20ஆம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 பேரை emisஇல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்

இதையும் படிங்க: ‘மாணவர்களின் உடற்கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்’ - உடற்கல்வி ஆசிரியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.