ETV Bharat / state

கடற்கரைப் பகுதிகளைச் சூழ்ந்த இடர்கள்.. ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு ஆபத்தா? - வல்லுநர்களின் அதிர்ச்சியூட்டும் பதில்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 9:36 PM IST

Reproduction of turtles: எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் சென்னைக்கு முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் வழித்தடம் மற்றும் வாழ்வியல் பாதிப்பைக் குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு.

reproduction of turtles
எண்ணெய் கசிவுகளால் பாதிப்புக்குள்ளாகும் ஆமைகளின் இனப்பெருக்கம்

சென்னை: எண்ணூர் முகத்துவாரத்தில் மிக்ஜாம் புயலில் ஏற்பட்ட வெள்ளத்தில் சி.பி.சி.எல் ஆலையில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவு, எண்ணூர் பாலம் முதல் ரயில்வே பாலம் வரையிலும், பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியிலும் எண்ணெய் படலங்கள் படர்ந்து இருந்தது.

இதனை அடுத்து 'ஆயில் ஸ்கிம்மா்' உள்ளிட்ட எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கச்சா எண்ணெய்யை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 1,49,240 லிட்டர் எண்ணெய் கலந்த நீரிலிருந்து, 405 டன் எண்ணெய் அகற்றப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.

சி.பி.சி.எல் ஆலையில் இருந்து எண்ணூர் கடல் முகத்துவாரம் வரையில் உள்ள 11 கி.மீ மட்டுமல்லாமல், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், பழவேற்காடு கடல் முகத்துவாரம், ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் மாங்குரோவ் காடுகள் உள்ளிட்ட பல்லுயிரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தற்போது ஆமைகளின் இனப்பெருக்கம் காலம் என்பதால் அரிய வகை ஆமையான ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக சென்னை நோக்கி வரும் நிலையில், எண்ணெய் கழிவுகளால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக பலவேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆலிவ் ரிட்லி ஆமைகள்: உலகில் உள்ள 7 வகையான கடல் ஆமைகளில் மிகவும் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளது, இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள். பங்குனி மாதத்தில் இவைகள் முட்டை இடுவதால், பங்குனி ஆமைகள் என்றும் மீனவர்களின் நண்பன் என்றும் அழைக்கப்படுகின்றன.

குறிப்பாக, இவைகள் கிழக்குக் கடற்கரையில் முட்டையிடும் இனம் ஆகும். மேலும், இந்த வகை ஆமைகள் அழியும் நிலையில் உள்ள உயிரினமாக சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆலிவ் ரிட்லி ஆமைகள், சுமார் இரண்டரை அடி நீளமும், அகலமும் கொண்டவையாகும்.

12 முதல் 15 ஆண்டுகளில் பருவத்தை அடையும் இந்த ஆமைகள், தான் பிறந்த கடற்கரைக்கு வந்து, முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டதாகும். மேலும், இந்த ஆமைகள் பாசி, நண்டு ஆகியவற்றை உண்டு வாழ்பவை. தமிழகத்தின் கடற்கரைகளில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும்.

ஒரு பெண் ஆமை 50 முதல் 190 வரை முட்டையிட்டு, 45 நாள் முதல் 60 நாட்களுக்குள் குஞ்சு பொறிக்கும். தமிழகத்தில் 5 வகையான கடல் ஆமை இனங்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து வருகின்றன. அதில், ஆலிவ் ரிட்லி என்ற இன ஆமைகள் அதிக அளவில் தமிழக கரையில் முட்டையிடுகின்றன.

ஆமைகளுக்கு அச்சுறுத்தல்: 1,000 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் பிறந்தால், அதில் 10 மட்டுமே உயிர் வாழ்வதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதனாலும் இவற்றின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் தமிழக வனத்துறை மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகள் உடன் இணைந்து, ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் வகையில் 4 இடங்களில் குஞ்சுகள் பொறிப்பகம் அமைத்துள்ளன.

மேலும், ஆமைகளுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதால், தமிழக அரசு சார்பில், சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் எனவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் 1.83 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

இது குறித்து விலங்கு நல ஆர்வலர் சந்திரசேகர் கூறுகையில், “தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை பகுதியைச் சார்ந்தவை ஆகும். இங்கு அதிக அளவில் ஆலிவ் ரிட்லி கடலாமைகள் முட்டையிடும். இது ஜனவரி மாதம் முதல் எப்பரல் மாதம் வரை நடக்கும்.

சென்னையில் கடற்கரை பகுதியில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் ஆமைகள் முட்டையிடும். எண்ணூர் பகுதியில் படர்ந்து இருக்கும் எண்ணெய் கழிவுகளால் ஆமைகள் மட்டுமின்றி, அங்கிருக்கும் பவளப்பாறைகள் கூட பாதிப்படையும்" என கூறினார்.

மேலும், இந்திய அரசின் உயிரியல் துறையின் விஞ்ஞானி பத்மநாபன் கூறுகையில், “ஆமைகளைப் பொறுத்தவரை, நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 4 மாதங்கள்தான் இனப்பெருக்கத்தின் காலமாகும். மேலும், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் அவை முட்டையிட்டு, குஞ்சு பொறித்து மீண்டும் கடலுக்குச் சென்றுவிடும்.

தற்போது, எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் ஆமைகள் கண்டிப்பாகப் பாதிப்படையும். மேலும், ஆமைகள் வழக்கமாகக் கூடு கட்டும் மணற்பரப்புகள், இந்த எண்ணெய் கசிவால் பாதிப்படைந்திருக்கும். இதனால் முட்டையிட வரும் பெண் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு சுவாச பிரச்னை போன்றவை ஏற்படலாம். மேலும், குஞ்சு பொறித்த உடன் அவை கடலுக்குச் செல்வதால், தொடர்ந்து அந்த ஆமைகளின் வழித்தடமானது பாதிப்புக்கு உள்ளாகலாம். ஆகவே ஆமைகளின் வாழ்வியல் மிகவும் பாதிப்படையலாம்" என தெரிவித்தார்.

இவர்களைத் தொடர்ந்து மாவட்ட வன உயிரினக் காப்பாளர் பிரசாந்த் கூறுகையில், “சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில்தான் ஆமைகள் முட்டையிடும். குறிப்பாக பெசன்ட் நகர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பழவேற்காடு ஆகிய 4 கடற்கரைகளில் ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகளுக்கான பொறிப்பகங்கள் அமைக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் மொத்தமாக 2.7 லட்சம் முட்டைகளைச் சேகரித்துள்ளோம். இந்த கணக்கின் அடிப்படையில், தமிழகத்திற்கு 2,070 ஆமைகள்தான் வந்துள்ளன. எண்ணூரில் ஏற்பட்ட சுற்றுச்சுழல் பாதிப்பால், ஆமைகளின் வரத்து குறைந்துள்ளதா என்று தொடக்கத்தில் நம்மால் கணக்கிட முடியாது. அது முட்டையிட்டு அந்த பருவகாலம் முடியும் தருவாயில்தான் ஆமைகளின் வலசை காலம் பாதிப்படைந்துள்ளதா என்று தெரிய வரும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வடசென்னையை அலற வைத்த டிசம்பர் 2023.. பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.