ETV Bharat / state

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக உணவுத்துறை அமைச்சர் அறிக்கை!

author img

By

Published : Jul 9, 2021, 10:34 PM IST

எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பற்றி குறைகூறி ஒரு அறிக்கையை வெளியிட்ட நிலையில் பதிலளிக்கும் விதமாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

report-by-food-minister-sakkarapani-statement
report-by-food-minister-sakkarapani-statement

சென்னை : நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பற்றி குறைகூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொத்தாம் பொதுவாக டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பற்றி குறைகூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்குவதாகவும், அதற்காக அலுவலர்களை மிரட்டுவதாகவும் தெரிவித்து தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இது போன்ற நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உப்பிலியாபுரம் பகுதிகளில் தங்க நகர், பி.மேட்டூர், வைரிசெட்டிபாளையம், எரகுடி வடக்கு,ஆலத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, அங்கு விவசாயிகள் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகளைக் கொண்டு வந்துள்ள நிலையில் ஆளும் கட்சியினரின் அரசியல் தலையீடு காரணமாக நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதாகவும், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளுடன் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார்?

இந்த அறிக்கையைப் பார்த்தாலே கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று அவர் கூறியது போலுள்ளது என்பது அனைவருக்கும், குறிப்பாக உப்பிலியாபுரம் பகுதி விவசாயிகளுக்கும் நன்றாகத் தெரியும். ‘கமிஷன்’ என்ற தனக்குப் பிடித்தமான சொல்லைப் பயன்படுத்தியிருக்கும் முன்னாள் முதலமைச்சரும் ‘விவசாயி’ யுமான அவரின் ஆட்சியில் உப்பிலியாபுரம் பகுதியில் 2020 ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று செயல்பட்ட கொள்முதல் நிலையங்கள் ஐந்து.ஆனால், இப்போது செயல்படும் கொள்முதல் நிலையங்கள் 12.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அவரது ஆட்சிக்காலத்தில் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி முதல் 2020 ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை சென்ற ஆண்டு கொள்முதல் செய்த அளவு 2 ஆயிரத்து 446 மெட்ரிக் டன்கள். ஆனால் இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 8 ஆயிரத்து 65 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நெல் கொள்முதல் விவரம்

டெல்டா மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி முதல் 2020 ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 534 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 2 லட்சத்து 97 ஆயிரத்து 210 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அறிக்கை விடுவது அரைவேக்காட்டுத் தனம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தபின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மூன்று மடங்குக்கு மேலான அளவிலும், டெல்டா மாவட்டங்களில் 24 சதவீதத்திற்கு மேலும் அதிகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவரத்தை அவர் அறியாமல் தான் பேசுகிறாரா? நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யலாம் என்று அவருடைய ஆட்சியிலேயே சுற்றறிக்கை அனுப்பிவிட்டு இப்போது ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள் என்று அறிக்கை விடுவது அரைவேக்காட்டுத் தனம்.

தீர விசாரித்து அறிக்கை வெளியிட வேண்டும்

அவரின் ஆட்சிக் காலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் எருக்கூர் என்ற ஊரில் நெல்லைச் சேமித்து வைக்க 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ‘சைலோ’க்கள் அவரால் 02.07.2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டு இன்றளவும் முழுமையாகச் செயல்படாமல் உள்ளதையும் அதைச் செயல்படுத்த இன்னும் 14 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதையும் அவர் அறிவாரா?

அதுமட்டுமல்ல ஆண்டொன்றுக்கு 27 ஆயிரத்து 500 டன் அரைக்கும் திறன் கொண்ட அரிசி அரவை ஆலைகளுக்கு 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட ‘சைலோ’க்கள் கட்டியதை என்னவென்று சொல்வது? முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் புகார் சொல்லாமல் தீர விசாரித்து எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்று குறிப்பிட்டுச் சொன்னால் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதை அவருக்கு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

தேர்தல் வாக்குறுதிகளை திமுக விரைந்து செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாடு தழுவிய போராட்டம் - அதிமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.