ETV Bharat / state

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்த சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கோரிய ஆர்.பி.வி.எஸ்.மணியன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 5:44 PM IST

RBVS Manian: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S. மணியன், தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

Hindu leader rbvs Manian apologized to the court for his speech against Thiruvalluvar and Ambedkar
ஆர்.பி.வி.எஸ்.மணியன்

சென்னை: சென்னை தியாகராய நகரில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்டத் தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார்.

இதனடிப்படையில் மணியன் மீது வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மாம்பலம் காவல் துறையினர், அவரை கைது செய்தனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணியன் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, மணியனின் உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும், தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மணியன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

காவல் துறை சார்பில் மாநகர சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, மணியனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். அரசியல் சாசனம் என்றாலே அம்பேத்கர்தான் நினைவுக்கு வரும் நிலையில், அவரை மணியன் இழிவுப்படுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும், மணியன் சார்பில் சமர்பிக்கப்பட்ட மருத்துவச் சான்றுகள் அனைத்துமே 2021ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்றும், மணியனின் பேச்சு சமூகத்தில் இரு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து ஜாமீன் கோரிய மணியனின் மனு மீது வருகிற 25ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.