ETV Bharat / state

சென்னையில் தொடரும் மழை - 2ஆவது நாளாக விமான சேவைகள் பாதிப்பு

author img

By

Published : Jun 20, 2023, 9:51 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20ஆம் தேதி) இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

Rain continues in chennai - flight service disturpts in second day
சென்னையில் தொடரும் மழை - இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிப்பு

சென்னை: தென்மேற்குப் பருவமழை கேரளாவில் பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்வது வழக்கம். ஆனால், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்திருப்பது அரிதான ஒன்று.

சென்னையை ஒட்டி உள்ள கடலோரப் பகுதிகளில் ஒரு மேலடுக்குச் சுழற்சி உருவாகி உள்ளது. இதில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கனமழை பெய்துள்ளது. இந்த மழை, சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு பகுதிகளில், இரண்டாவது நாளாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20ஆம் தேதி) இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து இருந்து இன்று (20ஆம் தேதி) அதிகாலை 2:10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், அதைப்போல் இன்று அதிகாலை 3:10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சென்னையில் இருந்து அதிகாலை 00:30 மணிக்கு கொழும்பு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:05 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஆகியவைகளும் மோசமான வானிலை காரணமாக இன்று தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

அதேபோல் லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், அபுதாபியில் இருந்து சென்னை வரும் எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், துபாயிலிருந்து சென்னை வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய விமானங்கள் இன்று சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்துவிட்டு, தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

அதேபோல் சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், அதிகாலை 5:45 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.

27ஆண்டுகளுக்குப் பிறகு: சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக 1991ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 251 மில்லி மீட்டர் மழைப் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, 1996ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 450 மில்லி மீட்டர் மழைப் பதிவாகி இருந்தது. அதற்குப் பின்னர் தற்பொழுதுதான் ஜூன் மாதத்தில் சுமார் 150 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: TN Schools: இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.