ETV Bharat / state

பிலிப்பட்டி பள்ளி மாணவிகள் பலியான சம்பவம் - சக மாணாக்கர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க உத்தரவு!

author img

By

Published : Feb 17, 2023, 10:49 PM IST

புதுக்கோட்டையில் பிலிப்பட்டி பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் சக மாணவ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.

psychological
psychological

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே பிலிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து கடந்த 15ஆம் தேதி மாணவிகள் சிலர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதிக்குச் சென்றுள்ளனர். போட்டி முடிந்து திரும்பிய மாணவிகளில் 4 பேர், கரூர் மாவட்டம், மாயனூர் காவிரியாற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் சக பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன், தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். மேலும் மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால், புதுக்கோட்டை பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தால், இரண்டாவது நாளாக இன்றும்(பிப்.17) பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்ற போது, மாயனூர் காவிரி ஆற்றில் நடந்த விபத்தில் நம் அருமைக் குழந்தைகள் நான்கு பேரை இழந்துள்ளோம். இந்த இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அந்த மாணவிகளுடன் சென்ற மற்ற மாணவிகளுக்கும், அந்தப் பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாய் இந்நிகழ்வு இருந்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.

எனவே பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களை சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவவர்கள் இணைந்து, மாணவர்கள் இந்த பேரதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சம்பந்தப்பட்ட உளவியல் ஆலோசனைகளை தகுந்த அரசு மருத்துவர்களின் உதவியோடு வழங்கிடக் கூறியுள்ளேன். இந்த மனநல ஆலோசனை அந்த மாணவர்களை அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு உதவி புரியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழ் மீனவரை கொன்ற கர்நாடக வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.