ETV Bharat / state

பொங்கல் பரிசு - திமுகவின் நிலைப்பாட்டுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

author img

By

Published : Jan 1, 2023, 5:55 PM IST

’கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசு போதாது என்று கூறிய திமுக தற்போது ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறார்கள். ஆட்சிக்கு வரும் முன் ஒருநிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலைப்பாடு இது தான் திராவிட மாடலா’ என பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு ஆட்சிக்கு வந்ததற்கு பின் ஒரு நிலைப்பாடு
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு ஆட்சிக்கு வந்ததற்கு பின் ஒரு நிலைப்பாடு

சென்னை: கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து பெற்ற தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் 100 ரூபாய் பரிசுத் தொகை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,"அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக டெல்லியில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக சார்பில் கலந்து கொள்வார்கள், யார் கலந்து கொள்வார்கள் என்பதை தலைமைக் கழகம் பின்னர் அறிவிக்கும். கலந்து கொண்டால் தான் நிறை குறைகளை தெளிவாக அறிய முடியும். உண்மையில் அது பயனளிப்பதாக இருந்தால் அதனை தேமுதிக ஆதரிக்கும்.

தேமுதிகவின் உட்கட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பை விரைவில் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிடுவார். தலைவர் அவர்களால் செயற்குழு, பொதுக்குழு அறிவிக்கப்படும். செயற்குழு, பொதுக்குழுவிற்கு பிறகு அனைத்து விதமான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அறிவிப்போம். நிச்சயமாக நல்ல தகவலை தலைவர் அறிவிப்பார்.

பொங்கல் பரிசை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக அளித்த பொங்கல் பரிசு போதாது எனக் கூறினார்கள். தற்போது அவர்கள் ஆட்சியில் வெறும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாகவும் அரிசி, சர்க்கரை மட்டும் கொடுக்கிறார்கள். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

விவசாயிகள் பொங்கல் திருநாளை கருதி தான் கரும்புகளை விளைவிக்கிறார்கள். எதிர்ப்புகளை தெரிவித்த பிறகு கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் தாமதமாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு முன் ஒரு நிலைப்பாடாகவும் ஆட்சிக்குப் பின் ஒரு நிலைப்பாடாகவும் செயல்படுகிறது. இதை தேமுதிக ஏற்றுக் கொள்ளாது.

கேப்டன் பேசுவதிலும், நடப்பதிலும் மட்டுமே சிரமம் இருக்கிறது. மற்றபடி தொண்டர்களை சந்திக்க வரச்சொன்னது கேப்டன் தான். இது போன்ற முக்கிய நிகழ்வுகளில் நிச்சயம் கேப்டன் கலந்து கொள்வார். அவர் நலமாக உள்ளார். தேமுதிக-வை பொறுத்தவரை என்றைக்கும் விஜயகாந்த் தான் தலைவர். யாருக்கு என்ன பதவி கொடுக்கிறார் என்பது செயற்குழு, பொதுக்குழுவிற்கு பிறகு தான் தெரியும். கட்சி வளர்ச்சிக்காக பல செயல் திட்டங்களை வைத்துள்ளோம். அது அனைத்தும் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு தலைவர் அவர்களால் அறிவிக்கப்படும்.

2024ஆம் ஆண்டு தேர்தலில் எங்கள் கூட்டணி தொடர்பாக நிச்சயமாக தலைவருடைய நிலைப்பாடு என்ன என்பது தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு ஆட்சிக்கு வந்ததற்கு பின் ஒரு நிலைப்பாடு இதுதான் திராவிட மாடலா? என்ற கேள்வியை தமிழகம் எங்கும் பார்க்க முடிகிறது" என கூறினார்.

நடிகர் சத்தியராஜ் விஜயகாந்திற்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்
நடிகர் சத்யராஜ் விஜயகாந்திற்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

மேலும் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சத்யராஜ், தியாகு ஆகியோர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அ.தி.மு.க.வில் தொடர ஈ.பி.எஸ்.க்கு தகுதி இல்லை - வைத்திலிங்கம் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.