ETV Bharat / state

கனமழையினை திறம்பட எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்

author img

By

Published : Nov 11, 2022, 2:28 PM IST

தமிழகத்தில் கனமழை, அதி கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கனமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளன என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 1,149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை முதல் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில். இராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் 42 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் நிலைநிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராணிப்பேட்டை, வேலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 23 மாவட்டங்களில் இன்று (11-11-2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1-10-2022 முதல் 10-11-2022 வரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 497 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 437 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 60 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர்தேக்கங்களின் நீர் நிலவரம்

இன்று காலை 8 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 19.87 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 330 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 677 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.64 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Rajiv Gandhi murder case: நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.