ETV Bharat / state

"100 நாள் வேலைத்திட்டம் முடங்க வாய்ப்புள்ளது" - ஆய்வில் தகவல்

author img

By

Published : Feb 21, 2023, 8:11 PM IST

தமிழ்நாட்டில் அரசியல் தலையீடுகள் மற்றும் அதிகார பகிர்வு இல்லாமையால் 100 நாள் வேலைத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், இதே நிலை நீடித்தால் இத்திட்டமே முடங்க வாய்ப்புள்ளதாகவும் கள ஆய்வு நடத்திய தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் தகவல்
ஆய்வில் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகள் தொடர்பாக ஆய்வு செய்து வரும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிராஸ்ரூட் கவர்னன்ஸ் (IGG) மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து, தமிழ்நாட்டில் 'தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்' கிராம ஊராட்சி அளவில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பதை ஆய்வு செய்தன.

இந்த ஆய்வு தொடர்பாக 'அடிப்படை நோக்கத்திலிருந்து திசை மாறுகிறதா நூறு நாள் வேலைத் திட்டம்?' என்ற அறிக்கையை ஐஜிஜி அமைப்பினர் இன்று(பிப்.21) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜிஜி அமைப்பினர், "தமிழ்நாட்டில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. பஞ்சாயத்து தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் இத்திட்டத்தில் வேலை செய்யும் பணியாட்களுக்கும் இத்திட்டம் தொடர்பான விழிப்புணவு இல்லை.

சட்டப்படி, நூறு நாள் வேலைத் திட்டத்தில், கிராம ஊராட்சிகள், வேலை அட்டைதாரர்களுடன் கலந்துரையாடி பணிகளின் தொகுப்பை தேர்வு செய்து, அதற்கேற்ப ஒவ்வொரு பணிக்கும் தொழிலாளர் செலவு மதிப்பீடு (லேபர் பட்ஜெட்) தயாரிக்க வேண்டும். இவை இரண்டும் கிராம சபையில், மக்கள் முன் வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.

ஆனால், நாங்கள் களத்தில் ஆய்வு செய்தபோது, கிராம ஊராட்சிகளுக்கான இந்த பணிகளின் தொகுப்பு மற்றும் லேபர் பட்ஜெட் ஆகியவை தயாரிக்கப்படாமல், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் தோராயமாக பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என தெரியவந்தது. இதன் விளைவாகவே எந்த கிராம குடும்பங்களுக்கும் 100 நாள்களுக்கான வேலையை உறுதி செய்ய முடியவில்லை என அறிய முடிகிறது.

உதாரணமாக விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர், லஞ்சம் கொடுத்தால்தான் அந்த வட்டாரத்தில் உள்ள எந்த ஒரு கிராம பஞ்சாயத்திலும் வேலை நடக்கும் என கூறியுள்ளார். இதனால் அங்கே உள்ள கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை திட்டம் சில மாதங்களாகவே நடக்காமல் உள்ளது. ஆனால், இதனை அந்த கிராம மக்கள், பஞ்சாயத்து தலைவர்கள், செயலாளர்கள் தங்களது மேல் அதிகாரிகளிடம் எடுத்து செல்லலாம். ஆனால், அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை.

இதேபோல அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில், அந்த ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் வைத்திருந்த பதிவேட்டில் 71,000 நாட்களுக்கு மேல் வேலை நாட்கள் இருந்தது போல காட்டியது. ஆனால் இணையத்தில் 21,000 வேலை நாட்கள் என காட்டியது.

இப்படி இந்த திட்டத்தில் நிறைய குளறுபடிகள் இருந்தாலும், இதனை சரி செய்ய நிறைய வழிகள் உள்ளன. எனினும் அரசியல் தலையீடு மற்றும் அதிகாரப் பகிர்வின்மையால் நாட்டிலேயே முக்கிய துறைகளில் முதன்மையாக உள்ள தமிழ்நாடு இந்த திட்டத்தை பொறுத்த மட்டில் பின்தங்கி உள்ளது.

கடந்த வருடத்தில் மேற்கு வங்காள மாநிலத்தில் மத்திய அரசு இந்த திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய 7,500 கோடி ரூபாயை கொடுக்கவில்லை. மத்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்காததால் ஒரு வருடமாக மேற்கு வங்காளத்திற்கு இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதே நிலைமை தமிழ்நாட்டிற்கும் வரலாம். இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடந்தால் இந்த திட்டமே முடங்க வாய்ப்புள்ளது" என்றனர்.

இதையும் படிங்க: ஸ்ரீ சீதாராம் பள்ளியை ஏற்று நடத்துவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.