ETV Bharat / state

சென்னையில் விளையாட்டு நகரம்; விரைவில் திட்ட அறிக்கை - சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி தகவல்!

author img

By

Published : Apr 11, 2023, 6:18 PM IST

சென்னையில் அமைய உள்ள உலகத் தரத்திலான விளையாட்டு நகரத்திற்கு ஏற்ற நிலம் இறுதி செயப்பட்டு, விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Policy
சென்னை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பை அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரித்து 2022-23ஆம் நிதி ஆண்டில் 392.51 கோடியை எட்டி உள்ளது. 2023 மார்ச் மாதம் எழுத்து தேர்வு மற்றும் தொடர்புடைய விளையாட்டு செயல்திறன் மதிப்பீடு செய்யபட்டு 76 பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதற்காக 2022-23ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கோப்பை திட்டத்தினை செயல்படுத்த அரசு 50.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னையில் அமைய உள்ள உலக தரத்திலான விளையாட்டு நகரம், ஏற்ற நிலம் இறுதிசெயப்பட்டு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ஒலிம்பிக் அகாடமி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரி ஆகிய இடங்களில் அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு இப்போது தொடங்கியுள்ளது. அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சதுரங்க போட்டியில் உள்ள 72 கிராண்ட் மாஸ்டர்களுள் 27 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். அண்ணா மிதிவண்டி போட்டிக்கு 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் 23 மாவட்டங்களில் தற்போது 27 விளையாட்டு விடுதிகள் இயங்கி வருகின்றன, இதில் 1,925 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். தமிழ்நாடு அரசு 1,594 விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 43,18,75,000 ஒப்பளிக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு 1.25 கோடி மானியமாக வழங்கப்படுகிறது.

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஐந்து கோடியை அரசு மானியமாக வழங்குகிறது. நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 6,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தில் 78 நபர்கள் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் மேற்கொள்ளப்படும் நியமனங்களிலும், தமிழ்நாடு வன சார்நிலை பணிகளிலும் நேரடி நியமனம் மூலம் வனவர், வனக்காப்பாளர், வனக் காவலர் மற்றும் ஓட்டுனர் நியமனங்களிலும் 10% இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூனில் திறக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.