ETV Bharat / state

மது அருந்த சிறுவர்களை அனுமதித்த பார் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Oct 10, 2020, 10:35 PM IST

சென்னை: அண்ணா சாலையின் நடுவே 18 வயதுக்குள்பட்ட சிறார்கள் மதுபோதையில் ஆபாசமாக பேசிக்கொண்டும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்துகொண்டும் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சிறுவர்களை மது அருந்த அனுமதித்த பார் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

police-file-case-against-bar-for-allowing-boys
police-file-case-against-bar-for-allowing-boys

சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் தனியாருக்குச் சொந்தமான பார் ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பாரில் சனிக்கிழமைதோறும் கேளிக்கை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று இந்தப் பாரில் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள், சிறுமிகளை அனுமதித்து அங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில் பாரில் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் என 40-க்கும் மேற்பட்டோர் பாரில் குடித்துவிட்டு, சாலையில் நின்று ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் மது போதையில் இருந்த சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்துகொண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

இதனை படம்பிடிக்க முயன்ற புகைப்படக் கலைஞரின் கேமராவை குடிபோதை இளைஞர்கள் பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து மதுபோதையில் இருந்த சிறுவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலும் 18 வயதுக்குள்பட்டவர்களை பாரில் அனுமதிக்கக்கூடாது என்ற தடை அமலில் உள்ள நிலையில், சிறுவர்களை அனுமதித்த பார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:தஞ்சையில் இருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.