ETV Bharat / state

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் 20% இடஒதுக்கீடு

author img

By

Published : Sep 2, 2021, 2:56 PM IST

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் அரசுப் பணிகளில் 20 விழுக்காடு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

pmk Founder dr ramadoss statement  ramadoss  pmk Founder  pmk Founder ramadoss  pmk Founder ramadoss statement  competitive exam  special reservation for tamil medium students  tamil medium students  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு  இடஒதுக்கீடு  20 சதவீதம் இடஒதுக்கீடு  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் 20 சதவீதம் இடஒதுக்கீடு  ராமதாஸ்  பாமக நிறுவனர்  பாமக நிறுவனர் ராமதாஸ்  போட்டித்தேர்வுகள்
ramadoss

தமிழில் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான விதிகளில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் ஆணைப்படி, சில திருத்தங்களை அரசு செய்துள்ளது.

தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுக்க முழுக்கத் தகுதியானவர்களுக்கு மட்டும் சென்றடைவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

முழுமையான தமிழ் வழியில் பயின்றவருக்கே!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன், 2010ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு கொண்டுவந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை சிலர் முறைகேடாகப் பயன்படுத்துவதால், முழுக்க முழுக்கத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தது.

அதன்படியே 2020ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு சட்டத் திருத்தம் செய்தது. இந்தச் சட்டத்திருத்தத்தை 2020 ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) முதல் தொகுதி பணிக்கான போட்டித் தேர்விலிருந்தே செயல்படுத்தும்படி 2021 மார்ச் 22 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில், புதிய வழிகாட்டு விதிகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு விதிகளின்படி அரசின் எந்த வேலைவாய்ப்பாக இருந்தாலும் அதற்கான அதிகபட்சக் கல்வித் தகுதியை ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டும்தான் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பெற முடியும். இதனால் தமிழ் வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது.

பாமக விரும்பும் கூடுதல் கட்டுப்பாடு

இதன்மூலம் எந்த நோக்கத்திற்காகப் பாட்டாளி மக்கள் கட்சி போராடியதோ, அந்த நோக்கம் வெற்றிபெற்றிருக்கிறது. இதற்குக் காரணமான சட்டத்திருத்தத்தை கடந்த ஆண்டு இயற்றிய அப்போதைய அதிமுக அரசுக்கும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அரசாணை பிறப்பித்த இப்போதைய அரசுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக, மேலும் ஒரு கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு விதிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் இந்த சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்த விரும்பும் கூடுதல் கட்டுப்பாடு ஆகும்.

ஒதுக்கீடு வழங்கப்படுவதன் நோக்கம்

கடந்த காலங்களில் தமிழ் வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பயனடைந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கில வழியில் போட்டித் தேர்வுகளை எழுதித் தேர்ச்சிப் பெற்றவர்கள் ஆவர்.

இப்போதும்கூட ஆங்கில வழியில் படித்தவர்கள் தமிழ் வழியில் படித்ததாகச் சான்றிதழ் பெற்று, ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதி, 20 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. அது தடுக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, அரசு வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதன் நோக்கமே தமிழ் வழியில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். தமிழைப் பயன்படுத்துவது போட்டித் தேர்வுகளிலும், பணியிலும் தொடர வேண்டியது கட்டாயமாகும்.

அதற்காகப் போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் தமிழ் வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற கூடுதல் நிபந்தனையையும் புதிய அரசாணையில் அரசு சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறேன்.

இதையும் படிங்க: 'மருத்துவ சேர்க்கை கொள்கை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு' - மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.