ETV Bharat / state

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஓபிஎஸ் வலியுறுத்தல்

author img

By

Published : Sep 30, 2022, 2:28 PM IST

வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஓபிஎஸ் வலியுறுத்தல்
வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது, வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது, பருவமழை துவங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை ஒரு மாநில அரசின் முக்கியமான கடமைகளாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கடந்த ஆண்டு பெருமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும், இந்த ஆண்டு அதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்றும், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதாகவும், முக்கியக் கால்வாய்களில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்து, இந்த ஆண்டு மழை நீர் தேங்காது என்று எதிர்பார்ப்பதாகவும் கூறி இருந்தார்.

முதலமைச்சரே 'ஓரளவு' என்று சொல்வது இந்த ஆண்டும் மழை நீர் தேங்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், நேற்று முன் தினம் பெய்த ஒரு மணி நேர மழையில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

இந்த மழைக்கும், வழக்கம் போல் பாதிக்கப்படும் பகுதிகளான கோடம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கிண்டி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், ராயபுரம், பிராட்வே, கொடுங்கையூர், தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை என பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், மின் வாரியப் பணிகள், குடிநீர் வடிகால் வாரியப் பணிகள் என பல்வேறு பணிகளுக்காக சென்னை முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.

இதுவும் மழைநீர் தேங்குவதற்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் ஒரு காரணமாகும். இது தவிர, மழைக் காலங்களில் இந்தப் பள்ளங்களைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் கீழே விழுந்துவிடுகின்ற நிலை ஏற்படுகிறபோது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய சூழ்நிலையும் உருவாகும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான பணிகள் இன்னமும் துவங்கப்படவில்லை.

எனவே, இந்த ஆண்டும் பேருந்து நிலையங்கள் குளமாக காட்சி அளிப்பது என்பது தவிர்க்க முடியாதது. ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து மழைப் பொழிவு ஏற்பட்டால் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையை அடுத்து, வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் நேற்று ஆய்வு செய்து, அக்டோபர் மாதத்திற்குள் வெள்ளத் தடுப்புப் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இருப்பினும், இந்த வெள்ளத் தடுப்புப் பணிகள் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் அந்த அளவுக்கு இருக்கிறது.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பருவமழையின் போது, ஆங்காங்கே தோண்டப்பட்டு இருக்கும் பள்ளங்களை சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.