ETV Bharat / state

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த கெடுபுடி

author img

By

Published : Mar 24, 2023, 7:03 PM IST

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் அட்டை மட்டுமே ‘இதற்கு’ ஏற்கப்படும் - மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
மெட்ரோ ரயில் அட்டை மட்டுமே ‘இதற்கு’ ஏற்கப்படும் - மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த கெடுபுடி

சென்னை: சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பணம் இல்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பணம் செலுத்துவதற்கு பதிலாக, மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், அது மட்டுமல்லாமல் பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களில் இருந்து வேகமாக நுழைவது மற்றும் வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் பணம் இல்லா பரிவர்த்தனைகளின் வசதி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கும்.

பயணிகள் மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்திலும் பெற்றுக் கொள்ளாலம். மெட்ரோ ரயில் பயணிகள், பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்பனை செய்யும் இடத்தில் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைய தளத்திலும் மறுஊட்டம் (TopUP) செய்து கொள்ளலாம்.

வாகன நிறுத்தும் இடத்திற்கான அணுகல், பயண அட்டைகள் உடன் மட்டுமே கிடைக்கும். வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் பயணிகள், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால், அனைத்துப் பயணிகளும் மெட்ரோ ரயில் பயண அட்டைகளை விரைவாகப் பெறுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் 20 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவை மெட்ரோ திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாயும், மதுரை மெட்ரோ திட்டத்திற்கு 8,500 கோடி ரூபாயும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tamil Nadu Budget: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்.. பட்ஜெட்டில் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.