ETV Bharat / state

ஆம்னி பேருந்துகளில் 60% கட்டணம் உயர்வு.. கண்ணீர் வடிக்கும் பயணிகள்.. கண்டுகொள்ளுமா அரசு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 8:01 PM IST

Updated : Oct 20, 2023, 8:49 PM IST

Omni bus Fare hike: தொடர் விடுமுறை காரணமாக தனியார் பேருந்து டிக்கெட் கட்டணங்கள் 60 சதவீதம் வரை அதிகரித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். தனியார் பேருந்துகளின் டிக்கெட் விலை ஏற்றத்தை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

60 - 70 சதவீதம் வரை உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்
60 - 70 சதவீதம் வரை உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்

சென்னை: வார இறுதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதைத் தொடர்ந்து, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்று தமிழ்நாட்டில், நாளை(அக்.21) முதல் செவ்வாய்க்கிழமை (அக்.24) வரை தொடர்ந்து 4-நாட்கள் விடுமுறை என்பதால், அரசுத் துறை, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சென்னையில் மற்ற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வேலை செய்பவர்கள் விடுமுறைக்காக அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால், தற்போது வரை அரசு சிறப்பு பேருந்தில் 90% முன்பதிவு முடிந்துள்ளது. இதனால் தனியார் ஆம்னி பேருந்துகளில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை டிக்கெட்டின் விலை உயர்ந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேறு வழியின்றியும் தவித்து வருகின்றனர்.

மேலும், அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதனால், ஏராளமான மக்கள் செல்ல இருப்பதால் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகம். தேவையான அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள் அவற்றின் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தியுள்ளதையடுத்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தனியார் பேருந்து கட்டணம்:

பேருந்து வழித்தடங்கள்ஏசி பேருந்து கட்டணம்சாதாரணப் பேருந்து கட்டணம்
சென்னை- கன்னியாகுமரி ரூ.3,500 ரூ.2,000
சென்னை - தேனிரூ.3,000 ரூ.1,500
சென்னை - நெல்லைரூ.2,800ரூ.2,000
சென்னை - மதுரைரூ.2,700 முதல் 3,000 ரூ.1,700 முதல் 2,500
சென்னை - கோவைரூ.4,000 ரூ.1,900 முதல் 2,500

அரசு பேருந்து கட்டணம்:

பேருந்து வழித்தடங்கள்

BERTH

(ஏசி பேருந்து)

SEATER

(ஏசி பேருந்து)

சென்னை - கோவைரூ.1,030ரூ.600
சென்னை - நாகர்கோவில் ரூ.1,300ரூ.730
சென்னை - திருச்சிரூ.1,030ரூ.600
சென்னை - தேனி ரூ.785 ரூ.507

இதைத் தொடர்ந்து சென்னை- கும்பகோணம் ஆகிய மாவட்டங்களுக்கு ரூ.1,000 முதல் 1,700 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இது வழக்கத்தை விட 70 சதவீதம் அதிகமாக உள்ளது என்று பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் (கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர்) அரசு பேருந்துக்களை பொருத்தவரையில், ஏசி பேருந்தில் 370 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும் அரசு பேருந்தில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், "ஆம்னி பேருந்துகளின் விலை எப்போதும் இதேப்போல் தான் அவர்கள் உயர்த்தி வருகிறார்கள். அவர்களின் கட்டணம், வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் எப்போதும், 30-சதவீதம் அதிகமாக இருக்கும். இப்போது தொடர் விடுமுறை என்பதால், அவர்கள் விலை மனசாட்சியின்றி ஏற்றி உள்ளனர். நாங்கள் விடுமுறை தினத்தில் எங்கள் குடுமபத்தோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் இவர்களின் விலை ஏற்றம், நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு வராத நிலைமையை ஏற்படுத்துகின்றது.

மேலும் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்து என்று விடுகிறது. ஆனால், அந்த பேருந்து போதுமானதாக இருப்பது இல்லை. தமிழக அரசு அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் இல்லையேல், ஆம்னி பேருந்துகளுக்கு என்று நிலையான கட்டணத்தை நிர்ணயக்க வேண்டும். இந்த விடுமுறை தினத்தை அவர்கள் பயன்படுத்தி எங்களின் பணத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பறிக்கும் நிலை தான் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இது குறித்து நாகர்கோவில் செல்ல இருந்த பயணி ஒருவர் கூறுகையில், "நான் நாகர்கோவில் இருந்து சென்னையில், இரு கட்டுமான நிறுவனத்தில் கட்டுமான பொறியாளாராக பணிப்புரிந்து வருகிறேன். நான் அடிக்கடி ஊருக்கு செல்ல முடியாது. தசரா, தீபாவளி, பொங்கல், விடுமுறை என்று தான் ஊருக்குச் செல்ல முடியும். ரயிலிலும் சரியான நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது. மேலும், அரசு பேருந்துகளும், சிறப்பு பேருந்துகளுக்கும் இருக்கின்றன. ஆனால், அது போதுமானதாக இல்லை. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து டிக்கெட்டின் விலையில், நான் ஊருக்குச் சென்று திரும்பினால் என்னுடைய பாதி சம்பளம் முடிந்துவிடும். மேலும், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்க சொல்ல முடியாது. ஆனால் அரசு தேவைக்கேற்ப பேருந்து இயக்கினால் போதுமானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து கும்பகோணம் செல்லும் பயணி ஒருவர் கூறுகையில், "கடந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு ஊருக்கு சென்ற போது, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை, சேலம் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன ஆனால், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், பெரம்பலூர், கடலூர், பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட ஊர்களுக்கு குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. இரவு 8 மணி வரை நாங்கள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் பேருந்து கிடைக்கவில்லை. இம்முறை தனியார் பேருந்தில் பார்த்தால், அரசு பேருந்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Last Updated : Oct 20, 2023, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.