ETV Bharat / state

நெல்லை - சென்னை வந்தே பாரத்.. கன்னியாகுமரி வரை நீட்டிப்பு! பிரதமருக்கு ஓ.பி.எஸ் கடிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 2:28 PM IST

நெல்லை- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்

பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை

சென்னை: நெல்லை- சென்னை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க, சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று(செப்.24) டெல்லியில், காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நெல்லையை தொடர்ந்து நாடு முழுவதும் ஒன்பது நகரங்களுக்கு வந்தே பாரத்தின் சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அதிநவீன வசதிகள் மற்றும் குறுகிய நேரப் பயணம் என்பதால் பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக வந்தே பாரத் ரயில், தமிழகத்தில் சென்னை - கோவை மற்றும் சென்னை - மைசூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாவது ரயிலாக நெல்லை - சென்னை இடையே தனது சேவையை தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: உலக நதிகள் தினம் : சண்முக நதியில் 5 டன் குப்பைகளை அகற்றி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு!

நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில், வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர்த்து, மீதமுள்ள ஆறு நாட்களிலும் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மீண்டும் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, "நெல்லை-சென்னை, சென்னை-விஜயவாடா இடையே இரண்டு புதிய ரெயில்கள் உட்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்ததற்காக பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால், பயண நேரம் தற்போது 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால், தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

எனவே, நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க, சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: அருணாச்சல வீரர்களின் விசா விவகாரம்; இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த சீனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.