ETV Bharat / state

சென்னை ஐஐடியில் என்பிடிஇஎல்-கேட் தேர்வுக்கான பாடத்திட்டம் இலவசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 5:21 PM IST

NPTEL GATE of IIT Chennai offers free syllabus: சென்னை ஐஐடியின் என்பிடிஇஎல்-கேட் (NPTEL-GATE) முதுகலை தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பாடத்திட்டங்களை இலவசமாக வழங்குகிறது.

தேர்வுக்கான பாடங்களை இலவசமாக வழங்கும் என்பிடிஇஎல் கேட்
தேர்வுக்கான பாடங்களை இலவசமாக வழங்கும் என்பிடிஇஎல் கேட்

சென்னை: சென்னை ஐஐடியின் என்பிடிஇஎல்-கேட் (NPTEL-GATE) இணைய முகப்பு (gate.nptel.ac.in) முதுகலை தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பாடத்திட்டங்களை இலவசமாக வழங்குகிறது.

என்பிடிஇஎல்-கேட் இணைய முகப்பில் 50,700க்கும் மேற்பட்ட விண்ணப்ப பதிவுகள் வரப் பெற்றுள்ளன. 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற கேட் தேர்வின் உள்ளடக்கங்கள், முந்தைய ஆண்டுகளில், அதாவது கடந்த 2007 முதல் 2022-ஆம் ஆண்டு வரை இடம் பெற்ற கேள்விகளை இந்த இணைய முகப்பு வழங்குகிறது.

தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் (NPTEL) என்பது சென்னை ஐஐடி உள்ளிட்ட பல்வேறு ஐஐடி-க்கள் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) என்பது பொறியியல்,
தொழில்நுட்பம், அறிவியல், கட்டிடக்கலை, மானுடவியல் (Humanities) என பல்வேறு இளங்கலை நிலைப் பாடங்களில் விரிவான புரிதலுக்கான விண்ணப்பதாரர்களை மதிப்பிடும் தேசிய அளவிலான தேர்வாகும்.

கேட் தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள், நிதி உதவியுடன் கூடிய முதுகலை மற்றும் நேரடி முனைவர் பட்டத்திற்கான
பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 7 முதல் 10 லட்சம் மாணவர்கள்
கேட் தேர்வை எழுதுகின்றனர். 2023ஆம் ஆண்டில், ஏறத்தாழ 7 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வுக்குப் பதிவு செய்திருந்தனர். இதில் ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள் வெற்றிகரமாக தகுதி பெற்றனர்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவிய நீதிபதிகள்..! கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

இது குறித்து சென்னை ஐஐடியின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும்போது, “மாதிரித் தேர்வுகள் மற்றும் நேரடி அமர்வுகளில் மாணவர்கள் அதிகளவில் கலந்து கொள்வது, இணைய முகப்பின் விரிவான தகவல்களைப் பயன்படுத்தி கேட் தேர்விற்கு தயாராவதில் அவர்களுக்கு உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. கேட் ஆர்வலர்களுக்கு பல்வேறு அம்சங்களை இலவசமாக வழங்குவதுடன், உயர் தரமுள்ள கல்வியின் உள்ளடக்கத்தை எல்லோரும் பெறும் வகையில் அமைந்துள்ளது.

கேட் தரவரிசையில் மிகச் சிறந்த முறையில் சாதிக்க விரும்பும் மாணவர்கள், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்னரே தங்களைத் தயார்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். பலர் மிகுந்த பொருட்செலவு செய்து தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், ஆன்லைன் இணையதளங்கள் மூலமும் பயிற்சித் தேர்வுகளை எழுதுகின்றனர்.

என்பிடிஇஎல்-கேட் (NPTEC-GATE) இணைய முகப்பு 2007 முதல் 2022 வரையிலான முந்தைய ஆண்டுகளின் கேள்விகளை (PYQs) வழங்குகிறது. 16 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கேட் தேர்வுகளின் தலைப்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது. மின்சாரப் பொறியியல், இயந்திரப் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், மின்னணு மற்றும் தொலைத்தொர்பு, இயற்பியல், வேதியியல் ஆகிய 6 முக்கிய பாடங்களில் 115 மாதிரித் தேர்வுகளை, கடந்த ஆகஸ்ட் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர்.

15 அக்டோபர் 2023-இல் தொடங்கிய தற்போதைய செமஸ்டரில் முந்தைய 6 தேர்வுகளுடன் உயிரிப் பொறியியல் உள்பட 7 பாடங்களில் மொத்தம் 19 மாதிரித் தேர்வுகளை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். நேரடி தயார்படுத்தும் அமர்வுகளில் அதிகளவில் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 521 முதல்கட்ட அமர்வுகளில் 3,975 மாணவர்களும், 367 இரண்டாம் கட்ட அமர்வுகளில் 3,321 மாணவர்களும் பங்கேற்றனர். மூன்றாம் கட்ட நேரலை அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல்வேறு களங்களில் அத்தியாவசிய கேட் தலைப்புகளை உள்ளடக்கியதாக இந்த கலந்துரையாடல் பாடங்கள் அமைந்திருக்கின்றன" என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 10ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்.. உளவுத் துறையில் 677 காலியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.