ETV Bharat / state

ஏடிஎம் மையத்தில் கீழே கிடந்த ரூ.25 ஆயிரம்.. செல்போனை பறித்த இளைஞர் கைது.. உள்ளிட்ட சென்னை க்ரைம் செய்திகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 10:33 PM IST

Chennai Crime News: சென்னையில் ஏடிஎம் மீது இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை மீட்ட காவலர், 30 அடி கிணற்றில் விழுந்த முதியவர் பத்திரமாக மீட்பு உள்ளிட்ட சென்னையில் இன்று (செப்.4) நடந்த குற்றச் செய்திகள் குறித்து காணலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நங்கநல்லூர் பர்மா தமிழ் காலனியைச் சேர்ந்தவர் இசை (21). இவர் செல்போன் உதிரிபாகும் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (செப்.03) மாலை நங்கநல்லூர் ரகுபதி நகர் முனீஸ்வரன் கோயில் அருகில் இசை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருக்கு தெரிந்த நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்கிற திருட்டு ராஜி என்பவர் சென்று இசையிடம் தனக்கு உடனடியாக பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

இதற்கு இசை தன்னிடம் தற்போது பணம் இல்லையென தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகர் இசையின் கன்னத்தில் அறைந்து விட்டு கையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பர்சில் வைத்திருந்த 500 ரூபாயை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் இசை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், ராஜசேகர் என்ற திருட்டு ராஜி (25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மேலும், இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளரை தாக்கிய வழக்கறிஞர்: சென்னை ஜேஜே நகர் டிஎஸ் கிருஷ்ணா நகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியின் தூய்மைப் பணியாளராக முகப்பேர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 50 வயதுடையவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி மாலை பள்ளியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவர், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், தவறாக தொட்டதாகவும் அவர்களின் பெற்றோர்களிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவியின் பெற்றோர் ஒருவர் நேரடியாக பள்ளிக்குச் சென்று தூய்மைப் பணியாளரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்பொழுது தூய்மைப் பணியாளருக்கும், மாணவியின் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவியின் தந்தை, தூய்மைப் பணியாளரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்டவர் தனியார் பள்ளியின் முதல்வரிடம் தெறிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஜேஜே நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில் இருந்து எந்த புகாரும் காவல் நிலையத்திற்கு வரவில்லை என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு: சென்னை கேகே நகர் ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் வசந்தி (47). இவர் அதே பகுதியில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (செப்.03) மதியம் தனது வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி வசந்தி கீழே விழுந்தார்.

அப்பொழுது வசந்தியின் மகள் யுவஸ்ரீ அருகில் இருப்பவர்கள் உதவியுடன் வசந்தியை மீட்டு கேகே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். வசந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து வசந்தியின் உடல் உடற்கூராய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கேகே நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏடிஎம் மீது இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர்: அமைந்தகரை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலரான பணியாற்றி வருபவர் தமிழ்மணி. இவர், நேற்று (செப்.03) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது செனாய் நகரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் பதிவேட்டில் கையெழுத்திட சென்றபோது ஏடிஎம், மேல் ரூபாய் 25 ஆயிரம் பணம் இருந்துள்ளது.

பணத்தைக் கண்ட அவர், உடனடியாக பணத்தை அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். யாருக்குச் சொந்தமான பணம்? என்பது குறித்து அமைந்தகரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

30 அடி கிணற்றில் விழுந்த முதியவர் பத்திரமாக மீட்பு: தாம்பரம் அடுத்த கடப்பேரி எம்.இ.எஸ்.ரோடில் உள்ள மின் பகிர்மான நிலையத்தில் உள்ளே 30 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் நேற்று (செப்.03) நள்ளிரவு ஒருவரின் முணங்கள் சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கண்ட மின் வாரிய ஊழியர்கள் தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், கிணற்றில் காயமடைந்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் தண்னீர் இல்லாததால் முதியவரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற தாம்பரம் காவல் துறையினர், முதியவரிடம் நடத்திய விசாரனையில், அவர் கடப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், எதற்காக நள்ளிரவில் அங்கு சென்றார்? தவறி விழுந்தாரா, தற்கொலை செய்துகொள்ள முயற்ச்சித்தாரா? என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து திருடப்பட்ட 66 பவுன் தங்க நகைகள் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.