ETV Bharat / state

நமக்கு நாமே திட்டம்: பட்டியலின, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் பங்களிப்பு குறைப்பு

author img

By

Published : May 12, 2023, 11:03 AM IST

நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கும் கூடுதலாக பட்டியலின மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பணிக்கும், பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்புத் தொகையை 20 விழுக்காடு என்ற அளவிற்கு குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டம்: பட்டியலின, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் பங்களிப்பு குறைப்பு
நமக்கு நாமே திட்டம்: பட்டியலின, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் பங்களிப்பு குறைப்பு

சென்னை: இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வெளியிட்டுள்ள ஆணையில், "அரசு, சமுதாய உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், பராமரிப்பதிலும் பொதுமக்களின் சுயஉதவி நடைமுறையை மேம்படுத்தவும் மற்றும் பங்கேற்பினை அதிகரிக்கும் நோக்கத்திற்காக, 'நமக்கு நாமே’ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 13.09.2021ஆம் நாளிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண் 71இல் வெளியிடப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், நீர் நிலைகளை சீரமைத்தல், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களை நிறுவுதல், மேம்பாடு செய்தல் மற்றும் சீரமைத்தல்,

தெரு விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், மரங்கள் நடுதல், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொது மக்களுக்கு பயன்படும் கட்டடங்கள் ஆகியவற்றை கட்டுதல் மற்றும் சீரமைத்தல், பொது நுாலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள், பாலங்கள், சிறு பாலங்கள்,

புதிய தகன மேடைகள், மழைநீர் வடிகால்கள், மண் சாலைகளை அனைத்து பருவகாலங்களுக்கு ஏற்ற சாலைகளாக, அதாவது தார் சாலைகள், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்துதல், பொது மற்றும் சமுதாய கழிவறைகள், சந்தைகள், கடைகள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர்நிலை புனரமைப்பு பணிகள் தவிர்த்து, மற்ற பணிகளுக்கு பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்பானது, பணி மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். நீர்நிலை சீரமைப்பு பணிகளுக்கு பொது மக்களின் குறைந்தபட்ச பங்களிப்பானது, பணி மதிப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் ஆகும்.

பொது மக்கள் பங்களிப்பிற்கு உச்சவரம்பு ஏதும் இல்லை. இதன்படி அரசு நமக்கு நாமே திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், இதற்கான பொதுமக்களின் பங்களிப்புத் தொகை 151.77 கோடி ரூபாய் ஆகும். இத்திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 2 ஆயிரத்து 568 பணிகள் எடுக்கப்பட்டு, ஆயிரத்து 446 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 07.01.2022 அன்று சட்டப்பேரவையில் உரையாற்றியபோது, ‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களுடைய பங்கு என்பதை பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு’ என விதிகள் தளர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குறிப்பிடப்பட்ட பகுதியின் மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் கூடுதலாக பட்டியலின மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பணிக்கும், பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்புத் தொகையினை, பணி மதிப்பீட்டுத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இருப்பினும், பொதுமக்கள் பங்களிப்பிற்கான உச்சவரம்பு ஏதுமில்லை. இதன் அடிப்படையில், திட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உரிய திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை பட்டியலின மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அதிகளவிலான பொதுமக்களின் பங்கேற்பினை ஊக்குவித்து, இப்பகுதிகளுக்கு அதிகளவில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதுவாக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாநில கல்விக் கொள்கை குறித்த ஜவகர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; குழு தலைவர் நீதிபதி முருகேசன் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.