ETV Bharat / state

'கோட்டையில் குற்றாவாளிகள் இருப்பதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வரவில்லை'

author img

By

Published : May 22, 2020, 2:17 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் செய்த குற்றவாளிகள் கோட்டையில் இருப்பதால், அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை இன்னும் வெளிவரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

mk stalin
mk stalin

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று மே 22 - அப்பாவிப் பொதுமக்கள் மீது, அநியாயமாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆண்டுகள் இரண்டு ஓடினாலும், அந்தத் துப்பாக்கிச் சூட்டினால் வடிந்த ரத்தம் காய்ந்துவிட்டாலும், ஏற்பட்ட கொடுங்காயங்கள் ஆறிவிட்டாலும், அதனால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடு மட்டும் மாறாது; தீராது.

எதிரி நாட்டு ராணுவம் சுடுவதைப் போல, இரக்கம் சிறிதும் இன்றி கொடூர மனதுடன், சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் நடத்திய குண்டு வேட்டைச் சத்தம் இப்போதும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கிறது; அந்தப் பகுதி மக்களின் உறக்கத்தை அனுதினமும் கலைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

நூறு நாள்கள் அமைதி வழியில் போராடிய மக்களை அடித்துக் கலைக்கத் திட்டமிட்டு வன்முறையை விதைத்து, ’இனி இந்தப் போராட்டம் தொடரக்கூடாது’ என்ற பயத்தை ஏற்படுத்தவே, ஏதுமறியாத 13 பேரின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. இந்தப் பழியை எத்தனை ஆண்டுகளானாலும் பழனிசாமி அரசாங்கத்தால் துடைத்துக் கொள்ள முடியாது.

மக்களை அமைதிப்படுத்தவும் திசை திருப்பவும் விசாரணை ஆணையம் என்ற நாடகத்தை அரங்கேற்றி, அடுத்தக் கொடும்பழியை வாங்கிக் கட்டிக்கொண்டது அதிமுக அரசு. மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை இதுவரை வரவில்லை. அந்த ஆணையம் உண்மையில் சுட்டிக்காட்ட வேண்டிய குற்றவாளிகள் கோட்டையில் அல்லவா இருக்கிறார்கள்? தென்பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயவே ஓயாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மண்ணுக்காக உயிர்நீத்த என் மகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி பெற வேண்டுமா?' - ஸ்னோலின் தாயார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.